Sunday, 17 July 2016

சொற்களை விட மௌனம் மிகவும் முக்கியமானது

பேட்டி தொடர்கிறது
வி. பா:  உங்கள் படைப்புகளில் அடிக்கடி எதிர்ப்படும் ''தீம்''களில் ஒன்றான வறுமை' யை அது நினைவூட்டுகிறது .நீங்கள் வறுமையின் பல்வேறு கோணங்களைக் கோடிட்டுக் காட்டினாலும்  ஜான் ஆஸ் போர்ன்  தன் ''லுக் பேக் இன் ஆங்கரி'ல் செய்வது போல அதை வைத்து போலி உணர்ச்சி உருக்கமோ,  பணக்காரர்களை கடுமையாகக் கண்டிப்பதோ கிடையாது.இல்லை. அதற்கு என்ன காரணம்?
                                                       
ஜான் ஆஸ் போர்ன் 
தி.கு என் இளமைக்கால அனுபவங்கள் எல்லாமே சாதாரண மக்களோடு தான் நிகழ்ந்தன.எனக்கு எந்த ஒரு வயதுவந்த வெற்றியாளரின் ரோல் மாடலும் கிட்டவில்லை. அந்த சாதாரண மனிதர்களின் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்கும் நான் சாட்சியாக இருந்தேன், எதிர்பாராத தருணங்களில் வயது வந்தோர் நொறுங்கி விடுவதை நான் கண்டிருக்கிறேன். மனித ஆளுமைகளின் பல்வேறு வகை கோணங்களையும் நான் கண்டு உணர நேர்ந்தது . எனது இயல்பான நகைச்சுவை உணர்வு , அவற்றைக் குத்தலாகவோ ஏளனமாகவோ நோக்கவிடாமல் தவிர்த்தது . ஆனால் வறுமையை  ஒருபோதும் ஒரு காட்சிப் பொருளாக வைக்கக்கூடாது என்ற திட உணர்வைக் கொடுத்தது.
                                                               
''லுக் பேக் இன் ஆங்கர்" 

வி. பா: உங்கள் படைப்புக்களில் மற்றொரு முக்கியமாகக் காணப்படும் தீம் மரணம். அத்தகைய படைப்புக்களில் கூட விலகி நின்று பார்க்கும் கோணமே வெளிப்படுகிறது. எந்த வித இஸங்களில் இருந்தும் நீங்கள் விலகி நின்றாலும் நிஹிலிசத்தோடு தொடர்பற்ற எக்சிஸ்டென்ஷியல்  போக்கு மிக ஆழமாகத் தென்படுகிறது. உங்கள்  சிறுகதைத் தொகுதியின்  தலைமைப் படைப்பான ''கடவு '' மரண எதிர்பார்ப்புத்த தருணத்தை மரணத்திடமிருந்தே பிரித்துக் காட்டுகிறது.அந்தக் கதை எனக்கு ஹைடிக்கரின் மரணத்திற்கு முந்திய தருணம்[ ‘Moment before Death.’] என்ற கருத்தியலை நினைவூட்டியது. :

தி.கு : அது வேண்டுமென்றே எந்த குறிப்பிட்ட தத்துவத்தைப் பின்பற்றிச் செல்லும் உத்தேசத்தினால் அல்ல.கடவு கதை  என் பாட்டியின் மரணத்தைப் பின்னணியாகக் கொண்டது. தனது மரணத்தை உணர்ந்த அவர் உயிர் விடுவதற்கான ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். எனினும் ஒரு படைப்பாளி ஓர் உண்மை வாழ்க்கை அனுபவத்தை கதைவடிவமாக்க அதை மாற்றியமைக்கவும்  கூடுதல் விவரம் சேர்க்கவும் வேண்டி வருகிறது. மேலும் மரணம் என்பதை நான் வாழ்வின் ஓர் முக்கிய அம்சமாகக் காண்கிறேன். அதுவே இறுதி என்று காட்ட முயலவில்லை. மரணத்திற்கு ஒரு மிகைப்படுத்தப்பட்ட முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன். எனவே அந்த அளவில் அதை ''அண்டர்பிளே'' செய்கிறேன்
                                                           
கடவு நூல் மேலட்டை 

வி. பா: : உங்கள், “கடிதம் ” கதையில் ஓ'ஹென்றியின் அதிசய  உத்தியைக் கையாண்டு மரணத்திற்கு அஞ்சிக்கொண்டே இருப்பவன் நெடுநாள் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்; அவனது புலம்பலைக் கேட்டுக்கொண்டே இருப்பவன்  திடீரென்று செத்துப் போகிறான்.  அதே அதிசய  உத்தி தான். சரிதானா?
தி.கு : ஆமாம். ஜனம் கதையில் சுயநினைவின்றி விழுந்திருக்கும் ஒருவனைச்செத்துவிட்டான் என்று நினைத்து  வெளிப்படும் மக்களின் அறிவீனத்தைக் காட்ட முயன்றிருக்கிறேன். மனம் எனும் தோணி பற்றி கதையில் மக்கள் எவ்வாறு மரணத்துக்கு அருகாமையிலான அனுபவத்தைத் தவிர்க்கிறார்கள்  தடம் கதையில் போலீஸ்  கஸ்டடியில் இருந்து விடுதலை பெற மரணத்தை ஒரு கருவியாகக் காட்டியிருக்கிறேன் .
வி. பா:  அந்தக் கதை உடல் பாதைகளில் இருந்து ஒரு உடனடி நிவாரணம் வழங்குகிறதே தவிர அங்கே எதிர்ப்பே இல்லை. மிகவும் கீழ்ப்படிதலான  ஏற்பே உள்ளது.
தி.கு :  போலீஸ்  கஸ்டடியில் இருக்கும்போது எப்படி ஒருவர் எதிர்ப்புத் தெரிவிக்க முடியும்?அந்தக் கதை  1980களின் முற்பாதியில்  அடிக்கடி நேரிட்ட என்கவுண்டர் கொலைகள் பற்றியது.  அதுதான் யதார்த்தமும் கூட .சாட்சியம் இல்லாத வன்முறை நிகழும்போது பாதிக்கபடுபவர்  பணிந்து ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை.  ஆனால் அவனைத் துன்புறு வத்துகிறவருக்கு  வேறுவிதமான  பாதிப்புகள் உண்டு. காரணம் அவர் தான்  நடக்கிற வன்முறையின்  ஒரே சாட்சி. ஆகவே அது  உள்ளுணர்வுகளுக்கு ஒரு தூண்டுவதாகவும் பின்னால் வன்முறை என்ற செயலின்  வியர்த்தத்தைப்புரிய வைக்கவும் உதவக்கூடும் .மேலும் தன்னை அதிலிருந்து விலக்கிவைப்பதன் ,மூலம் ஒருவன் தன்  ஆன்ம கௌரவத்தின் ஒரு கூறினைக்  காப்பாற்றிக் கொள்ள முடியும்.
வி. பா:  ஆனால், விலகிநிற்றல் என்பது ஒரு வகை பற்றின்மை அல்லவா? நான் இதைக் கேட்பதற்கு ஒரு காரணம் உண்டு. உங்கள் படைப்புக்களில் செக்ஸ், மரணம், என்ற இரு அம்சங்களில் இந்த பற்றின்மை  அதிகம் தலை காட்டுகிறது . உடல் பூர்வமான நெருக்கம் இருக்கிறது. ஆனால் அது நம்பிக்கையை நோக்கி இட்டுச் செல்வதில்லை. உங்கள்   “ நிகழ மறுத்த அற்புதம்”  என்ற கதைகளை வைத்துக்கூறுகிறேன்
தி.கு :  நான் .லட்சியபூர்வமான அல்லது ரொமாண்டிக்கான   காதல் அனுபவத்திற்கு ஆட்பட்டதில்லை; காதல் சூழ்நிலையோடு சம்பந்தப்பட்டது. அது  எப்போதுமே  ஆறுதல் தருவதாக இருந்து விடுவ தில்லை. பெரும்பாலும் அது உடலோடு தொடர்புடையதாகவே இருக்கிறது . என்னைச் சுற்றி உடலின் பௌதீக துர் உபயோகங்களையே நான் காண்கிறேன். உடலின் மீதான நம்பிக்கை தான் சுய-கௌரவத்தை வரையறுக்கிறது. அதனால் தான் அந்த உணர்வை நான் சினிக்கலாக  அணுகுகிறேன்
 வி. பா:இது “நிகழ மறுத்த அதிசயம் ”கதையில் வருவது போல் மௌனத்தையும், சொற்களின் மீதான நம்பிக்கையின்மையையும் காட்டும் போக்கோடு தொடர்புடையதா ?
தி.கு : ஒரு பொதுக் கொள்கையாக  சொற்களை விட மௌனம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.இந்தக் கதையில் மிஸஸ்.ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்துக்கு குரலே கிடையாது என்று காட்டவே நான் விரும்பினேன்

                                                       
சாஹித்ய அகடெமி 1989ல் ஏற்பாடு செய்த மொழிபெயர்ப்புப் பணிமனையில் வல்லிக்கண்ணன் திலகவதி, தம்பி ஸ்ரீனிவாசன்  மற்றும் பிற எழுத்தாளர்களுடன் மூன்றாவது வரிசையில் உயரமாகத் தென்படும் திலீப் குமார் 
வி. பா உங்கள் படைப்புக்களில் காணப்படும் பற்றின்மையை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . படர்க்கை எனப்படும் மூன்றாவது ஆள் பேசுவது போன்ற டெக்னிக் உங்கள் படைப்புக்களில் மேலோங்கி நிற்கிறது.கோயம்பத்தூர் குண்டு வெடிப்புகள்  பற்றிய ஒரு குமாஸ்தாவின் கதை படைப்பில்  முன்னிலை முறை உத்தியை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள். இதைப் பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
தி.கு : அவர்  யாராகவாவது இருக்கலாம். அந்த வன்முறை நிகழ்வுக் காலங்களில் ஒரு தனி நபர் தனது நுண்ணுணர்வுகளில் இருந்து விடுபட்டு அதற்கு அப்பாற்பட்டவராகவே இருக்கிறார். தன் சுயத்துவத்தோடு ஒரு தொடர்பு அற்றுவிடுகிறது. அதைத் தான் ஒரு குமாஸ்தாவின் கதையில் நான் முன்னிறுத்தி இருக்கிறேன்
வி. பா : உங்கள் படைப்புக்களில் குஜராத்திகளுக்கும் தமிழருக்குமான கூட்டு வாழ்வின் சரியான தொடர்பு வெளிப்படுகிறது ஆனால் குஜராத்தி சொற்றொடர்களை தமிழ் வடிவிலும் , மொழிபெயர்த்தும் எழுதுகிற தேவையை  என்னால் அங்கீகரிக்க முடியவில்லை தீர்வு ,ஜனம் ,கடிதம் அக்ராஹாரத்தில் பூனை ஆகிய கதைகளை வைத்துக்கூறுகிறேன்
தி.கு : அது என் படைப்புமொழிக்கும் சொந்த அனுபவ மொழியான குஜராத்திக்கும் இடையிலான தீர்க்க முடியாத போராட்டத்திற்கும் இடையில் நேரும் விளைவு. இரண்டிற்குமே நான் விசுவாசமாக இருக்க நேரிடுகிறது.
வி. பா : உங்கள் வாழ்க்கைப் பார்வை மற்றும் படைப்புக்களுக்கிடையிலான கருத்து மற்றும் வேறுபாடுகளை அற்புதமாக சுட்டிக் காட்டினீர்கள்.எழுத்தாளர் என்ற முறையில் உன்னால் கொள்கை என்ன என்று கேட்டுவிட்டு  பேட்டியை முடிக்க விரும்புகிறேன்..
தி.கு : என் கொள்கை என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கைகள் விரிவாக்கம் தான்.வாழ்க்கை என்பது கறுப்பாகவோ வெள்ளையாகவோ இல்லை. அது முக்கியமாக சாம்பல் நிறத்தில் தான் இருக்கிறது. பெரும்பாலும்  சார்பு நிலையாகக் கொள்ள ,எந்த தத்துவப்போக்கோ அல்லது வேறு எதுவோ  இல்லை. நாம் வெற்றி பெறாதவர்களாக இருந்தபோதிலும் நமக்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும் .எனவே மனித கௌரவத்தையும் மாண்பையும் நாம் தக்க வைத்துக்கொள்வது முக்கியம்.  ஓர் எழுத்தாளன் என்ற முறையில் எனது முதல் பணி என்பது ஒரு நல்ல கதை சொல்வது . என்னைப் பொறுத்தவரை  அதன் விளைவுகளை எப்போதும் நிலைநிறுத்துவது தான்.   என்னைச் சுற்றி உள்ளவர்களிடம் உணர்வுகளை விரிவடையச் செய்வதும் , பரிவும் பச்சாதாபமும் கொள்வதும் எழுத்தாளன் என்ற நிலையில் எனக்குள்ள பொறுப்புணர்வு. அது மிகவும் பெரிய பணி, காரணம் அந்த உணர்வுகள் அதிகரித்த அளவில் அருகிக் கொண்டே வருகின்றன
[இந்தப் பேட்டிக்கு அரும்பத உரை, விளக்க உரை எழுதும் சிரமம் தவிர்க்க விரும்புகிறேன். திலீப் குமார் என்ற இலக்கிய ஆளுமையின் ஓசை செய்யாத உள்ளடக்கத்தை ஓரிரு முறை வாசிப்பது அவசியம்]


No comments:

Post a Comment