Thursday, 14 July 2016

திலீப்குமார்-பேட்டி

.
[பொதுவாகவும், சிறப்பாகவும், குறிப்பாகவும்,வெறுப்பாகவும் கறுப்பாகவும், வெள்ளையாகவும், விவரிப்பாகவும்  சொல்லப்போனால் எனக்குப் பேட்டிகள்  பிடிக்காது. கொடுப்பதும் எடுப்பதும் இரண்டுமே!ஆனால்  எனக்கு எது எது பிடிக்காது என்று கண்டுகொண்டு  உலகம் எல்லாவற்றையும் மாற்றி அமைத்துக் கொள்வதில்லை. அது பாட்டுக்கு அது பேட்டித் தொழிலை  பெட்டிக்கடைத் தொழில் போல நடத்திக் கொண்டு தானிருக்கிறது 
பேட்டி பற்றி அசோகமித்திரன் தமக்கே உரிய குத்தூசி நகைச்சுவையோடும் ஒரு  நிதர்சனக்கண்ணோட்ட த்தோடும் கொடுத்த பேட்டி ஒன்று பின்வருமாறு.]

"ஒரு புது மாதப் பத்திரிகைக்காக நண்பர் ஒருவர் என்னைப் பேட்டி கண்டார்.  கேள்விகள் அவருடையது.  பதில்களை எழுதிக் கொடுத்து விட்டேன்.  அச்சில் எப்படி வரப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.
 கடந்த பத்தாண்டுகளாகத்தான் நான் பேட்டி காணக் கூடியவனாக நினைக்கப் பட்டிருக்கிறேன்.  பேட்டி காண வருபவர்கள் ஒருவர் தவறாமல் அவர் காணும் பேட்டி மிகவும் வித்தியாசமானது என்றுதான் சொல்வார். ஆனால் ஒரே மாதிரிக் கேள்விகள்.  அல்லது ஒரே மாதிரிப் பதில்களைப் பெறக்கூடும் கேள்விகள்.
 உண்மையில் இந்தப் பேட்டிகளில் பேட்டி காணப்படுபவரை விட பேட்டி காண்பவரின் நோக்கம்தான் நன்கு வெளிப்படுகிறது.  ஆரம்பத்தில் அச்சில் என்னுடைய பேட்டிகளைக் கண்டு நான் திகைத்துப் போயிருக்கிறேன்.  இப்போது பதில்களை எழுதிக் கொடுத்து விடுவது அதனால்தான்.  இல்லாது போனால் பேட்டி காண்பவர் அவராகவே பதில்களை எழுதிக்கொண்டு விடுவார்.  இதைத் திட்டமிட்டபடி செய்வது உண்டு.  அப்படியொரு திட்டம் இல்லாமல் பேட்டிகள் நிகழ்ந்திருக்கின்றன.  இதெல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியரின் தேர்வு என்று ஒன்றுண்டு.  அவர் வெட்டி விடும்போது எப்படி நான் முக்கியம் என்று நினைத்ததை உணர்ந்து கொண்டு அதை வெட்டிவிடுகிறார் என்றும் ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.
 பேட்டிகளே பத்திரிகைத் தேவைக்காக உருவான ஒரு வடிவம். வள்ளுவரும், வீரமாமுனிவரும் பேட்டி கொடுத்ததாக வரலாறில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பத்திரிகைகளும் மக்களிடையே ஜனநாயகச் சிந்தனைகளும் எழுச்சி பெற ஆரம்பித்ததில் ஒரு பிரச்னை குறித்துக் கேட்டு அதற்கு அந்த அறிஞரின் பதிலைத் தருவதில் பேட்டி வடிவம் ஒரு மாதிரித் தெளிவு பெறத் தொடங்கியது.
 இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் சில அமெரிக்க இளைஞர்கள் ''பாரிஸ் ரிவ்யூ'' என்ற பத்திரிகையைத் தொடங்கினார்கள்.  (கம்ப்யூட்டர்க்காரர்கள் திட்டவட்டமான தகவல்கள் பெறலாம்).  இவர்களுடைய பத்திரிகையில் பிரபல எழுத்தாளர்கள் இடம் பெறவும் வேண்டும், அவர்களுக்குச் சன்மானம் தரும்படியாகவும் இருக்கக் கூடாது.  இதற்கு ஓர் உத்தியாக''பாரிஸ் ரிவ்யூ' பேட்டிகள் தொடங்கின.  பேட்டிக்கு முன்பு பேட்டி காண்பவர்  அந்த எழுத்தாளரின் படைப்புகள், அவருடைய தொடக்கம், வளர்ச்சி, வாழ்க்கை வரலாறு, படைப்புகள் அனைத்தையும் நன்கு அறிந்து ஆராய்ந்து வைத்திருப்பார்.  எழுத்தாளருக்கு அந்தப் பேட்டி புத்துணர்ச்சியூட்டுவதாக அமையும்.
 பேட்டிகள் பற்றி முற்றிலும் எதிர் கோணத்தில் ஒரு கருத்து இருக்கிறது.  பேட்டியைப் படிப்பவர்கள் சாதாரணப் பத்திரிகை வாசகர்கள்.  அவர்களுக்கு எழுத்தாளர்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கப் போவதில்லை.  ஆதலால் பேட்டி காண்பவர் அந்த வாசகர்களின் பிரிதிநிதியாக இருந்து அந்த எழுத்தாளரின் பதில்களைப் பெறுவதுதான் பெரும்பான்மை வாசகர்களுக்கு நியாயம் செய்வது ஆகும்!
 ஆனால் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன.  உண்மையில் எழுத்தைப் பற்றியும் எழுத்தாளரைப் பற்றியும் ஒப்புக்குத்தான் கேள்விகள்.  பல கேள்விகள் ஜோசியர்களைக் கேட்பவையாக இருக்கும்.  இது எப்போது முடியும்?  அது எப்போது மாறும்?  இதை ஏன் நீங்கள் செய்யவில்லை?  அதை ஏன் செய்தீர்கள்?  உண்மையில் இதெல்லாம் யாருக்கும் எந்தத் தெளிவும் ஏற்படுத்தப் போவதில்லை.
 எழுத்தாளனுக்கு - புனைகதை எழுத்தாளனுக்கு - அவனுடைய புனைகதைதான் முறையான வெளிப்பாடு.  அப் புனைகதைகளுக்கு அப்பால் அவன் பேச வேண்டியிருந்தால் அவன் புனை கதைப் படைப்பை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதான் பொருள்.
 இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால் பேட்டி தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.  பல சந்தர்ப்பங்களில் பேட்டி தாட்சண்யத்துக்காக ஒப்புக் கொள்ளப் படுகிறது.  பேட்டி காண வருபவர் நிறுவனம் எதையும் சாராது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பார்.  இந்தப் பேட்டி எதாவது ஒரு பத்திரிகையில் ஒரு சிறு தொகை அவருக்குப் பெற்றுத் தரக்கூடும்.
                                                       
க்ளிக்ரவி எடுத்த இந்த அறிய புகைப்படத்தில் திலீப்குமார், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, கல்கி ஆசிரியர் ஆர்.வெங்கடேஷ் என்று முக்கிய புள்ளிகள் இடம்பெற்றுள்ளனர் 

இந்தப் பேட்டியை  எடுத்தவர்  டாக்டர்.வி. பாரதி ஹரிஷங்கர் .அவர்   .TeNet Group, IIT Madras ,Principal Project Officer

[ஆனால் திலீப் குமாரின்  இந்தப் பேட்டி  மாறுபட்டதாக உண்மையை அதன்  உள்மூலத்தில் சென்று சந்திப்பதாக அமைந்திருந்தது பேட்டிஇந்தப் பேட்டி திலீப்குமாருக்கு பாஷாபாரதி விருது கிடைத்தபோது  திலீப்குமாரைப் பாராட்டி எடுக்கப்பட்டது. இதில் திலீப்குமார்  கொண்டுள்ள  உண்மையான தமிழ் இலக்கிய ஈடுபாடு நன்கு  வெளிப்படுகிறது.]
VB: ஒரு குஜராத்தியாக தமிழ் மொழியின் பாலும்  தமிழ் இலக்கியத்தின் பாலும் உங்களுக்கு  ஆக்கப்பூர்வமான அக்கறை எப்படி ஏற்பட்டது.?
DK: எங்கள் குடும்பம் நூறு ஆண்டுகளுக்கு முன் தெற்கே இடம்பெயர்ந்து கள்ளிக்கோட்டை ,கோயம்புத்தூர்,சென்னை ஆகிய இடங்களில் குடியேறியது வெகு காலம் கழித்து ,  என் தந்தையின் மரணத்துக்குப் பின் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட,  தமிழர்களோடான என் தொடர்பு  துவங்கியது.  14ம் வயதில் ஒரு ரெடிமேட் ஆடைக்கடையில்  நான் சேல்ஸ்  பாய் ஆக வேலையில் சேர்ந்தேன். அது  தான் என்னை  தமிழ்ச்சமூகத்தின் ஏழைகளின் அரவணைப்புக்கு அழைத்துச்  சென்றது. அத்தோடு மட்டுமின்றி  எனக்குக் கல்வி மறுக்கப்பட்டதும் என் எதிர்காலத்தைக் குறித்த பெரிய கேள்விக்குரிய  என் உள்ளத்தை அரித்துக்கொண்டே இருந்தது . அத்தகைய  இருண்ட சூழ்நிலைகளில்  நான் வாசிப்புக்குத் திரும்பினேன். கைக்கு கிடைத்த எல்லாவற்றையும் வாசிக்கத்தொடங்கினேன். எனினும் அப்படி ஒன்றும் அவை அதிமாக இருந்து விடவில்லை. சமகாலத்து தமிழ் இலக்கியத்தின் நான் தாவியது மிகவும் தற்செயலான விஷயம்  தான்.  தமிழ் மொழி பால் எனக்கிருந்த இயல்பான ஈர்ப்பினால் என் ஆர்வம் நீடித்த வாசிப்புக்கு உதவியது. என் பள்ளிமேகஸினில்  தமிழ் படைப்புகள் வழங்குபவன் நான் ஒருவன் மட்டுமே. 
                                                                

                                                    டாக்டர்.வி பாரதி ஹரிஷங்கர்

வி. பா:எந்த குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளராவது அப்போது உங்களைப்பாதித்தது உண்டா?

தி.கு : 1960ன் பிற்பாதியில் நான் ஒரு தீவிர வாசிப்பில் இறங்கினேன்  மொழியின் மொழி மற்றும் பண்பாடு பற்றி திராவிட இயக்கித்தினர் பெருமிதமாக முழங்கி வந்த காலம் அது.அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சுக்களுக்கு தமிழ் மக்களின் அடித்தட்டு வர்க்கத்தினர் இடையே அப்போது பெருத்த வரவேற்பும் செல்வாக்கும் இருந்தது. இது இலக்கியத்தில் - அதாவது ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் லட்சியவாத எழுத்துக்கள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டது. அப்புறம் தமிழ்ப் படங்கள்.  
தமிழ் வாழ்க்கை மற்றும் சமூகம் குறித்த பல மாயைகளை தமிழ் அரசியல், இதழ்கள் மற்றும் திரைப் படங்கள் தமிழரிடையே பரப்பியது அந்தக் காலம் தான் என்று நான் சொல்லியே ஆகவேண்டும். என்னை அது பாதிக்கவே இல்லை. ஏனெனில் உண்மையான தமிழர் வாழ்வு மற்றும் உண்மையானதமிழ்ச் சமூகம் என்னவென்று நன்றாக அறிந்து வைத்திருந்தேன்.  தன் யதார்த்தவாத எழுத்துக்களால் என்னைக் கவர்ந்து என்னை  பாதித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தான். 

வி. பா: அத்தகைய தீவிரமான கருத்து பூர்வமான செல்வாக்குகளில் இருந்து பாதிக்கப் படாமல் உங்கள் எழுத்துக்களில் எந்த இசமும் தலை காட்டாமல் இருக்க  உங்களால் எப்படி முடிந்தது? நீங்கள் தெளிவாக எடுத்த முடிவா?

தி.கு இந்த கேள்விக்குப் பதில் சொல்லும் முன் என் வளர்ச்சிப் பருவத்தில் நான் கண்ட மற்றொரு தத்துவப் போக்கு ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நான் வசித்த கோயம்பத்தூர் ஒரு தொழிற்பகுதி. கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தின் கோட்டையாக அது இருந்தது .மார்க்சிஸ்ட் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. ஆனால் அந்தச் சிக்கலான கருத்துக்கள் எல்லாம் என்னால் கிரகிக்க முடியாத அளவு உயரத்தில் இருந்தன. ஒன்றை மற்றும் நான் அடையாளம் கண்டு கொண்டேன்."மனிதாபிமானக் கூறு" அது தவிர டையலெக்ட்டிக்ஸ், உபரி மதிப்பு இவை எல்லாம் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.  அப்போதும் கூட வறுமையை வெளிக்காட்டும் மத்திய தர எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கும்  வறுமையோடான கருத்துப்போக்கிற்கும் உண்மையான வறுமையின் அனுபவத்திற்கும் இடையே இருந்த இடைவெளி எனக்கு நன்கு புரிந்தது. அதுபோன்றே அறிஞர்களின் தமிழுக்கும் என்னைச் சுற்றி வாழும் எழுத்தறிவற்ற சாதாரண மனிதர் பயன்படுத்தும் தமிழுக்கும் இடையே இருந்த வேறுபாடும் எனக்கு நன்கு புலப்பட்டது

[தொடரும்]




No comments:

Post a Comment