சமீபத்தில் திலீப் குமார் வெளியிட்டுள்ள ரமா-உமா சிறுகதைத்தொகுதி வித்தியாசமானது
![]() |
| திலீப்குமார் தம் அலுவலகத்தில் |
தமிழ் இலக்கிய வானத்தை இன்னும் சற்று வெட்டிப்பிளந்து பண்பாட்டுக் கூடாரத்தின் ஜிப்பை விரியக் கிழித்து அகற்றி மீண்டும் மூடுகிற படைப்பு ரமா உமாதொகுதி .சிறு,குறு,பெரு, அரு என்று எந்த லேபிள் உள்ள பத்திரிக்கைப்பொட்டலத்தில் மடித்தாலும் ஜீவரசம் ததும்பும் தேங்காய்த் துருவல் தூவிய, பெருங்காய வாசனை உள்ள நல்ல கதை என்ற பட்டாணிச் சுண்டல் ஒரே மாதிரி தான் மணக்கும்; காலத்தால் அப்படி ஒன்றும் ஊசிவிடாது, சிறு,குறு,அரு லிஸ்டில் எழுதுகிற நாங்களே மகரிஷிகள் என்று இனி பெருமை பாராட்ட முடியாதவாறு பெரும் பத்திரிகைகளிலும் சிறு பத்திரிகைச் சித்தர்கள் அடிக்கடி இடம் பிடிக்கிறார்கள் .பிடிக்க மனுப்போடுகிறார்கள்
நல்ல பண்டம் எப்போதும் புதுமையாகச் சுவைக்கும் என்பதற்குத் துல்லியமான எடுத்துக்காட்டு ரமா-உமா சிறுகதைத்தொகுதி. இது இலக்கிய விமர்சனமா சுண்டல் விமர்சனமா என்று சந்தேகம் எழலாம்.இத்தொகுதியில் உள்ள 'நா காக்க அல்லது ஆசையும் தோசையும்' என்ற 19ம் நூற்றாண்டுக்காரர்களின் இலக்கியப் பண்பாட்டிற்கு ஏற்ப 'திலீப் குமார்' வேண்டுமென்றே கிண்டலாகத் தலைப்பிட்டுள்ள சிறுகதையில் மிட்டு மாமா நடமாடிய சௌகார்பேட்டை ,ஜார்ஜ் டவுன் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களின் பட்டியல்,ஹோட்டல்களின்விவரமான சிற்றுண்டிப் பட்டியல்
[யாரோ அந்த மிட்டு மாமா , அவர் மீது ஒரு நேசம் கலந்த பந்தத்தை ஏற்படுத்தி விடுகிறார் திலீப்.ஜானகிராமன், புதுமைப்பித்தன்,கல்கி ஆகியோர் போல இப்படி பாத்திரங்களோடு நம்மைப் பிணைக்கிற கலை தன்னை அறியாமல் திலீப் குமாருக்கு கைவந்திருக்கிறது, ரகசியம் ரொம்ப சிம்பிள் யாரைப் பற்றி எழுதுகிறாரோ அவர்களை திலீப் குமார் நேசித்தபடி எழுதுகிறார்.இங்கே குஷ்வந்த் சிங் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது .ஒரு பாத்திரத்தை எடுத்து விமர்சிக்கத் தொடங்கு; நல்ல எழுத்து பிறக்கும் என்று. திலீப்குமார் விமர்சிப்பவர் அல்ல ; நேசிப்பவர். கடைசி கடைசியாக வாசக அனுபவத்தில் ஆகட்டும் ; வாழ்க்கை அனுபவத்தில் ஆகட்டும் கைக்கு மிஞ்சுவது நேசம் தான். நேசத்தின் பல டிகிரிகள் தான்.
மிட்டு மாமா காட்டும் சிற்றுண்டி சாலைகள் பலவற்றுடன் 1950முதல் 1955 வரை தொடர்பு கொண்டிருந்த என க்கு, அப்படி ஒரு உவமை தோன்றியது.அதற்குக் காரணம் திலீப்குமார் சிறு பத்திரிகையில் எழுதியவர் என்ற முத்திரை விழுந்திருப்பது. அவர் தினமணி கதிரில் கூட எழுதியவர்.என்னைமாதிரி எந்தெந்த மடத்தில் சாப்பாடு என்று தேடி அலையாமல்,அலைச்சல் அவஸ்தை இல்லாமல் சொற்பமாக எழுதியவர். சொற்பமான-அவரே சொல்கிறபடி 300-400பேருக்கு மட்டுமே எழுதியவர்.
எந்தச்சிற்பி கோடானு கோடி ஜனங்களுக்கு என்று திட்டம் போட்டுக்கொண்டு ஜீவகளை யுள்ள சிற்பங்களைச் செதுக்குகிறார்? கல் கிடைத்து, உளி அமைந்து, கற்பனையின் கர்ப்பவேதனை கூடும்போது அதுபாட்டுக்கு சிற்பம் தானாக உருப்பெறுகிறது
எனினும் முதல் கதையான ரமாவும் உமாவும் மாதிரி அபூர்வமான தமிழில் இதுவரை தோன்றியே இராத,தமிழ்ப் பண்பாடு காக்க வேண்டிய சான்றோர் கூடமுகம் சுளித்தாலும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே உள் ளூர ரசிக்கும் , அற்புதமான குறுநாவல்
இது வரை நாம் அறியாத திலீப் குமாரை அறிமுகம் செய்கிறது.கதைப் பொருள் லெஸ்பியன் உறவு.அதுவே முதல் புதுமை . கதையை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விலக்கி கதாசிரியனோடு நேரடியாகச் சச்சரவு செய்யும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி ஓர் மாற்றம் தருகிறது.லெஸ்பிய உறவின் ஆன்ம நேய அனுபவங்களை அதிலும் கூட காதல் முகிழ்த்து மலர்ந்து மாபெரும் மலராக உணரவைக்கிறார். அநாயாசமாக சில்லென்று காலைத் தழுவும் கடற்கரை அலையின் நுரை வசனங்கள் ஓடுகின்றன." ஒரு நாள் கூட இப்படி யாரும் என்னை நேசித்ததில்லை.இப்படிக் கொஞ்சியதில்லை,இப்படி என்னை ரசித்ததில்லை. ஒருநாளில் இத்தனை முத்தங்களை நான் பெற்றதும் இல்லை."
இந்த வசனம் சொன்ன உமா.." இதுவரை ஒரு திருடியைப் போல , ஒரு பிச்சைக்காரியைப் போல் தான் என் உடலை நான் அணுகியிருக்கிறேன்"
என்கிறாள் [இதற்கு எந்த அட்ஜெக்டிவ் போட்டு ரசிப்பது அல்லது முகம் சுளி ப்பது உங்கள் சாய்ஸ்]
திலீப்குமார் ஒரு கவி.நிர்வாணமான இரு திருமணம் கடந்த குழந்தை குட்டிகள் பெற்ற இரு மாதர்களின் நிர்வாணத் தழுவலில் புதைந்திருக்கும் கட்டுப்பாடற்ற உடலியக்கங்களை எளிய சொற்களில் சொல்லும் கவி. அங்கே கிட்டும் உணர்வின் அனுபவச்சுவைகளில் அவற்றின் அதன் ஏற்றத் தாழ்வுகளை திகட்டிவிடாமல் சொல்லின் ஜலஜலப்புகளே இல்லாமல் உன்னதமாக நமக்குப் பகிர்ந்து தருகிறார். அபூர்வம், அற்புதம்..உன்னதம் என விமர்சன டிசிப்ளினே இல்லாமல் இப்படி அட்ஜெக்டிவ்களாக அள்ளிப்போடுவது குறித்து ஹெமிங்வேவும் அவர் வாரிசுகளும் முகம் சுளிக்கலாம் .
எனக்குத் தோன்றுகிறது. நான் போடுகிறேன். நீங்கள் படித்தாலும் அப்படித்தான் போடுவீர்கள். கம்பன் சொன்னான் உணர்வெனும் பெரும்பதம் என்று. உணர்வு பொங்காமல் கலைச்சிருஷ்டி நெடுநாள் உயிர் வாழாது.
கதை சம்பிரதாயமான ரீதியில் பாரா பாராவாக இல்லாமல் கிரேக்க ஐரோப்பிய நாடக பாணியில் கதை சொல்லி துவங்க, பாத்திரங்கள் உரையாடலில் நகர்கிறது
ரமா-உமாகதையில் உமா சொல்கிறாள்"இதன் சிறுமை என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது".
ரமா-இதில் சிறுமை எங்கே வந்தது?
உமாவின் பதில் : எங்கோ ஒரு கடற்கரை விடுதியில் இரண்டு வளர்ந்த பெண்கள் அம்மணமான கணம் எப்படி மகத்தானதாக இருக்க முடியும்?
அதற்கு ரமாவின் பதில் : மகத்தானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது ஓர் அற்புதமான தருணம்.தத்துவ வெளியீடே இல்லாமல் ஒரு செதுக்குச் சொல்லோவியம் தீட்டுகிறார் திலீப் குமார்
"சிலசமயம் வாழ்க்கையை நாம் வாழவேண்டும்,பலசமயம் அது நம்மை வாழ்ந்து விடும்"
புட்டம் பெரியதாக , உடம்பு குண்டாக இருப்பதற்காக ஜிம்முக்குப் போ என்று கணவனால் கட்டாயப் படுத்தப்பட்ட பெண் ஜிம்முக்குப் போனால் "என்ன மேடம் இதற்காகவா இங்கு வந்து சேர்ந்தீர்கள்-குஷ்பூ மாதிரி. எங்களோடு ஒப்பிட்டால் உங்கள் பின்புறம் ஒன்றுமேஇல்லை. எங்களுக்குப் பாருங்கள் எவ்வளவு பெரிசாக இருக்கிறது ஊறுகாய் ஜாடி மாதிரி" என்று அங்கே மற்ற பெண்கள் கேலி செய்கிறார்கள்
அதற்கு அவர் மாமியார் ரியாக்ஷ ன் வேறு மாதிரி.
"ஆண்களின் சுபாவமே விசித்திரமானது.அவர்கள் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றே புரியாது.பாடாய்ப் படுத்திவிடுவார்கள்....நல்லவேளை இவனவாவது உனக்குக் காசு கொடுத்து ஜிமமுக்குப் போ " என்கிறான். இப்படி ஒரு எண்ணம் உன் மாமனாருக்குத் தோன்றி இருந்தால் அவர் என்னை வீட்டிலேயே பஸ்கி போடவைத்திருப்பார்."
ரமா, உமா இருவரும் பேச்சுக்கு அப்பால் மொழி கடந்து பேசும் குறியீட்டு மொழியில் திலீப்குமார், நம்மை நேரடியாகக் களத்தில் கொண்டு போய் நிறுத்தும் டெக்னிக்கில் வெற்றி காண்கிறார்.
உ-ம்
உமா:வேண்டுமானால் நீ என் மடியில் படுத்துக்கொள்.
ரமா: ஏன்?
உமா: என்ன ஏன்?
ரமா:எனக்குத் தெரியும். எதற்குச சொல்கிறாய்?
உமா:எதற்கு?
ரமா: நல்லவலாட்டம் நடிக்காதே.
உமா: நான் சும்மா தான்.. பாசத்தோடு தான் சொன்னேன்.
ரமா: உன் பாசத்தைப் பற்றி எனக்கா தெரியாது?
உமா: ஒழிந்து போ.
கதாசிரியனாக திலீப் குமாரே தோன்றி கதாபாத்திரங்களால் கேள்வி கேட்கப்படுகிறார்.
"நாங்கள் ஏன் தமிழ்க் கதையில் குஜராத்திகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம் ?"
கதாசிரியரின் பதில்: சௌகார்பேட்டை குஜராத்திக் கிழவிகளையும் கிழவர்களையும் வைத்துக் கதை எழுதிப்பிரபலமானவன் நான். அதற்காகப் பரிசும் கொடுத்திருக்கிறார்கள்; சினிமாப்படமும் எடுத்திருக்கிறார்கள்.என் வாசகர்களுக்குக்குஜராத்திப் பாத்திரங்களை வைத்து கதை எழுதுவது தான் பிடிக்கும்... தமிழ்ப் பெண்களின் ஒழுக்கமும் நன்னடத்தையும் கேள்விக்குள்ளாக்கப் படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். என் மீது வழக்குப் போட்டாலும் போடுவார்கள் .
வாழ்க்கையின் குரூர நிஜங்களை திலீப் குமார் மிகவும் கூர்மையாகக் கவனித்து பெண்களின் வாயிலாகவே ஒரு தீர்ப்பையும் வழங்குகிறார்.
உதாரணம்,:
உமா: ஒரு விஷயம் கவனித்தாயா?உலகின் எல்லா மொழிகளிலும் பெரும்பாலான எல்லா வசைகளும் பெண்களின் பிறப்புறுப் பைச் சிதைப்பதைப் பற்றியே இருக்கின்றன. இந்த வன்மம் ஏன்?எப்படி?
ரமா:பெண்களின் யோனியைக் குறித்து எல்லா மொழி ஆண்களுக்கும் பதற்றம் தான்.ஒரு பெண்ணின் யோனியின் வீரியமும் ,கலவியின் பொது அதன் நுட்பமும் தான் அவர்களது ஆழ் மனதில் இவ்வளவு குரூரத்தை விளைவிக்கிறது.
உமா: உண்மை தான். ஒரு பெண்ணின் காமப் பரவசம் அலை அலையாக வந்து கரையைத் தொட்டுத் தொட்டு விளையாடும் கலைப் போன்ற லயம் கொண்டது.ஆனால் அவர்களுடையது நாய் ஒன்றுக்குப் போவது போல நொடியில் முடிந்து விடும் விஷயம்.அதனால் தான் இந்த ராஸ்கல்களுக்கு, நம் மீது இவ்வளவு பொறாமையும் பொச்சரிப்பும்.
இப்படி பெண்மனத்தின் ஆழங்களில் திலீப் குமார் சஞ்சரிக்கும்போது குறுநாவல் வாசிக்கிற அனுபவத்திற்கு அப்பால் நம் சித்தம் வேறு திசையில்
பயணம் போகிறது.
கதையை வாசிக்கிற வாசகனே அறியாத உண்மைகளை இரு கதாபாத்திரங்களும் கூறுகின்றன
கதையில் 30 இடங்களுக்கு மேல் அவர்கள் மௌனமாக இருந்தது ..கதையின் துல்லியத்தன்மையை வரையறுக்காமல் போனது..இப்படி எல்லாமே இதன் மிகைத்தன்மையை மழுப்புவதற்காக என்று குற்றம் சாட்டுகின்றன.
அதற்கு கதாசிரியர் என்ன பதிலளிக்கிறார்? இதை என் வாயிலாக ஓசியில் கேட்டுக்கொள்ளாமல் நீங்களே வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கதையை திலீப் குமார் மிகுந்த சாமர்த்தியத்தோடு முடித்திருக்கிறார்...
எப்படி?
நல்ல கதைகள் எல்லாம் உரிய நேரத்தில் எழுத்தாளர்களால் கைவிடப்பட்டவையே என்று கூறி.
அப்புறம்?
பிரயாசையே இல்லாமல் வாசிக்க வைத்து இலக்கியம் என்பது என்ன செய்ய வேண்டுமோ பண்பாட்டு வளர்ச்சி, மொழி வளர்ச்சி, சமூகக் கொடுமைகளின் சீறு குரல்கள் என்ற ஐட்டங்கள் இல்லாமல் நமக்குள் சில்லென்று நுழைந்து ஒரு ஆட்டு ஆட்டி வைக்கிறார்.
இலக்கியம் குஜராத்தி துப்பட்டா போட்டு வந்தாலும் தமிழ்ப் பாவாடை தாவணி கட்டி வந்தாலும் இலக்கியம் தான். இதோ தமிழ் மொழிநடை, காட்சி அமைப்பு,நேரடிவ் டெக்னிக் என்று பலவகைகளில் மாறுபட்டு முத்திரை பதித்துள்ள தொகுதி.காலத்தைப்பற்றி எக்கச்சக்கமான கேள்விகள் உள்ள நூல் இது. பதில் காண்பதா? விவாதிப்பதா?உங்கள் இஷ்டம்.
ஆனாலும் ஒரு கேள்வி.திலீப்குமார் தன் குஜராத்தி ஐடென்டிடியை அடிக்கடி ஏன் காட்டிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கத்தோன்றுகிறது.
எழுதுகிறவர் குஜராத்தியாகவே ஏன் ஒதுங்கி நிற்கவேண்டும்?
கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட விட்டல் ராவ், மலையாளியான ஜெயமோகன், தெலுங்கர்களான அசோகமித்திரன்,கி.ராஜநாராயணன், சௌராஷ்ட்ரர் ஆன எம்.வி.வெங்கட்ராம். அப்படியா ஒதுக்கம் காட்டி நிற்கிறார்கள்? சென்ற பதிவில் இதற்கொரு பார்வை இருக்கிறது
இன்னும் மூன்று கதைத்தொகுதிகள் கடந்து வந்திருக்கிற தூரத்தை வெளிக்கொணர ஒரு நெடிய ஆய்வு தான் செய்ய வேண்டும்.செய்ய முயல் வேன்.திலீப் குமார் முழுவதையும் அறிமுகமோ ஆய்வோ செய்யும் ஆர்வம் பிறக்க வைக்க இது ஒரு முன் மொழிதல் மட்டுமே.[தொடரும்]

No comments:
Post a Comment