Saturday, 25 June 2016

திலீப்குமார் என்ற மனிதர் -1

                                                                            
திலீப்குமார்
...நாம் மனிதர்கள், நாம் கள்ளமற்றவர்கள், உழைப்பு செயல் லட்சியம் இலக்கு போன்ற வார்த்தைகள் நம்மை வசீகரிக்கின்றன. இந்த வசீகரம், இந்தக் கவர்ச்சி, இந்த மாயை நமக்குத் தேவையாக இருக்கிறது. முற்றிலும் புதிதான ஒரு ஒழுங்கை இவ்வாழ்க்கைக்கு வழங்கிவிட நாம் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறோம்.  அதற்காகக் கோபப்படுகிறோம். போராடுகிறோம். கொலை செய்கிறோம். மடிந்துபோகிறோம். நமக்கு எப்போதும் பாதையை விட இலக்கே முக்கியமாக இருக்கிறது. பாதையின் பயங்கரமான நீளத்தை நாம் அறிய மாட்டோம். நம்மில் முட்டாள்கள் பாதையில் மடிந்து இல்லாத இலக்குக்கு இரையாகிப்போவார்கள். புத்திசாலிகள் பாதையின் ஒரு அசிங்கமான முனையில் நின்று அதையே இலக்கு என்று ஆர்ப்பரித்து ஏமாற்றுவார்கள். மீண்டும் புதிதான கோபங்கள், புதிதான போராட்டங்கள், புதிதான கொலைகள், புதிதான சாவுகள், ஏமாற்றங்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. அவை தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு புதிய நம்பிக்கையைத் தன் மடியில் சுமந்தே வருகிறது. அதைப் போன்றே ஒவ்வொரு நம்பிக்கையும் ஒரு புதிய ஏமாற்றத்தை”
-ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும் சிறுகதையில் .
-------------------------------------------------------------------------------------------------------------------------
பிராக்மாடிஸம் என்ற வாழ்க்கைப்போக்கை ஏற்றுள்ள அமெரிக்க சமூகத்தோடு முரண்பாடு கொண்டது இந்திய தரிசன முறை.அதற்கு கிட்டத்தட்ட ஒத்துப் போவது மேற்குறித்த சிந்தனை. இந்த மனப்போக்கு கொண்ட எழுத்தாளர் தீலீப் குமார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் என்றதும் நம் அனைவருக்கும்... ஏன் உலக மானுடத்துக்கே உரைகல் பொன்னாக விளங்கிய மஹாத்மா காந்தி நினைவு தான் வருகிறது. பிறகு வல்லப பாய் படேல். பிறகு மொரார்ஜி, தற்போது நரேந்திரமோடி. பொதுவாகக் குஜராத்திகள் அனைவரிடமும் அவர்கள் சமாதான விரும்பிகளாகத் தென்பட்டாலும்  எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்கள்.கொண்ட கொள்கைகளில் இருந்து அவ்வளவு லேசில் விட்டுக் கொடுக்காதவர்கள், வாழ்வோ சாவோ உறுதியாகப் போராடிப் பார்ப்போம் என்ற எண்ணம் உள்ளவர்கள். வைஷ்ணவமும் ஜைனமும் பின்னிப்பிணைந்து உருவானது தான் குஜராத்திப் பண்பாடு. எந்த இலக்கியவாதியின் CONTRIBUTIONம் அவனது MINDSET ஐ உருவாக்கிய பண்பாட்டுப் பின்புலத்தை வெளிப்படுத்திவிடும்  
திலீப் குமார் என்ற மனிதரைப் புரிந்து கொள்வதும் திலீப் குமார் என்ற தமிழ் எழுத்தாளரை அறிந்து கொள்ளவும் இந்தப் பின்னணியை நினைவில் வைப்பது முக்கியம்.குஜராத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னாள் இடம் பெயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் தீலீப் குமார் . சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்தவர் 
தான் வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடக்கும் என்று உணர்ந்து குடும்பப் பொறுப்பைச் சுமக்க ஆரம்பித்திருக்கிறார். கடைகளில் வேலைக்குச் சென்று உழைத்துக் கொண்டிருந்த பொழுதே அவருக்கு புத்தகங்களின் மீதும் வாசிப்பின் மீதும் தணியாத காதல் பிறந்திருக்கிறது. முறையான கல்வி கிடைக்கவில்லை. தாய்மொழியும்  தமிழ் இல்லை செய்யும்  வேலைகளில்  ஓய்வில்லை.
இதற்கு மத்தியில்  தமிழில் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் வழக்கம் எப்படி வந்தது என்பது என்பது ஓர் அதிசயம் தான். ஓர் எழுத்தாளனாவது ஒரு தற்செயல் அல்லது அருள் என்றால் ஒரு நல்ல வாசகனாவது ஒரு நல்ல சித்தி என்று தான்  கூற வேண்டும். தமிழ்க் கிராமீய சிந்தனையில் கூறப்போனால் அதற்கு தலையில் எழுதி இருக்கவேண்டும்.தலையெழுத்து.
கோவையில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல இலக்கியங்களைத் தேடிப் பிடித்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். முழுக்க தன் சுய முயற்சியின் மூலமாக மட்டுமே நல்ல இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். திலீப் குமார் வேலை பார்த்த  ஜவுளிக் கடை முதலாளி தினமும் தேநீர் அருந்துவதற்காக  சொற்ப பைசாக்களை அளிப்பார். அதைத் தேநீர் வாங்கிக் குடிக்காமல்  சேர்த்து வைத்து புத்தகங்கள் வாங்கிப் படித்திருக்கிறார். தனது ஆத்மீகத் தேடலுக்காக புற இச்சைகளை அகற்றிவைக்கும் பண்பு அப்போதிருந்தே அவரிடம் தொடங்கி இருக்கிறது.  தணியாத இலக்கிய ஆர்வம் இவரை  புத்தகங்களையும் நல்ல எழுத்தாளர்களையும் தேடித் தேடிப் படிக்கத்  தூண்டியிருக்கிறது . வாசிப்பிலும் எழுத்திலும் அவரது சூழல் ஏற்படுத்திய அனுபவத்தையும் தாக்கத்தையும் அதன் காரணமாக அவருள் தூண்டப் பட்ட எழுத்தார்வத்தையும் பல சம்பவங்களைச் சொல்லி ஒரு பேட்டியில் விவரித்திருக்கிறார் .
ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்து கொண்டிருந்த ஞானரதம் மாத இதழை ஜெயகாந்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப் பட்ட தீலீப்குமார் அந்த புத்தகத்தை வாங்க இயலாமல் அட்டைப் படத்தைப் பார்த்தே படிக்க ஏங்கிய நாட்கள் உண்டு.. ஜெயகாந்தனைப் போலவே அடித்தட்டு மக்களுடன் நன்கு பழகிய அனுபவம் இவருக்கு உண்டு. அவர்களது உலகத்தை எழுத வேண்டும் என்ற ஆர்வம் தனக்கும் ஏற்பட்டதற்கு  ஜெயகாந்தனின் எழுத்துக்கள் ஒரு காரணம்.கூறுகிறார். கூர்மையாகப் புறவுலகத்தை கவனித்தல் , எளிமையான மொழி நடை, மனிதர்களின் நுட்பமான மனம் பற்றிய தெளிவான பார்வைதீலீப்குமாருக்குக் கைவந்தவை. அவரிடம் பேசும்போதே நம்மைப் பற்றிய விவரங்களை அவர் நம்மையறியாமல் கணித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியும்  வலிந்து ஹாஸ்யம் எழுதாமல் இயல்பாக, மென்மையாக, கோமாளித்தனம் செய்யாமல் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் போக்கு இவருடையது தாம் கண்டதை, கவனித்து உள்ளுக்குள் உணர்ந்ததை வெளிப்படுத்த வேண்டும் என்று தோன்றி  தமிழில் சிறுகதையை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார் 
பொதுவாக குஜராத்திகள், அதுவும் அயல் மொழி பேசும் மாநிலத்தில் வந்து குடியேறிய குஜராத்திகள், நாலு காசு சம்பாதித்து சமூகத்தில் பெரிய மனிதனாக உயர வேண்டும் என்று கருதுவது தான் நடைமுறை. இதில் திலீப் மாறுபட்டது ஒன்றே இவர் மாறுபட்ட மனிதர் என்று வெளிப்படுத்தும்.
[தொடரும்]

No comments:

Post a Comment