Friday 22 July 2016

பப்லுப் பாட்டியும் ஒரு பூனையும்

   அக்ரஹாரத்தில் பூனை என்ற சிறுகதையில் இரண்டு முக்கிய முரண்கள். [1]பாட்டியும் ஒரு பூனையும்.
[2]புஷ்டிமார்க்க தத்துவமும் நடைமுறையும்.
திலீப்குமார் குஜராத்திப் பாட்டிகள், எலி, பூனைகளை வைத்துக் கதை எழுதுவதில் கைதேர்ந்தவர்.  அப்படி எழுதிச்செல்லும்போது குஜராத்திகள் சித்திரம், கூடவே அவர்களது சுபாவம் மொழிநடை இவை மிகவும் குறைவான சொற்செலவில் வந்து விடும்.
அக்ரஹாரத்தில் பூனை  கதையில் பப்லுப் பாட்டிக்கு தண்ணீர் காட்டும் ஒரு கில்லாடிப் பூனை வரும். அதை விரட்ட அவள் கையாண்ட குரூரமான தந்திரம் தான் முக்கிய விஷயம்.இந்தக்கதையை மனசை விட்டு லேசில் அகன்று விடாத கலை நுட்பத்தோடு புனைந்திருக்கிறார் திலீப்குமார்.
புதிதாக எழுத வருவோரும் ஏற்கெனவே  எழுதிக் கைத்தேர்ச்சி பெற்றோரும் திலீப் குமாரிடம்  கற்க வேண்டியது நிறைய உண்டு .
ஒரு சிறுகதையில் சூழ்நிலையை கண்முன் நடமாட வைக்க பலவிதமான உத்திகளை புதிது கையாள வேண்டிய கட்டாயம்  இன்றைய இலக்கியச் சூழலில் நேர்ந்திருக்கிறது. டீவி,யூட்யூப், மொபைலில் படம் எடுக்கும் வழக்கம் எல்லாம் வந்து  காட்சிகளை பிரசன்னப் படுத்த தொழில் நேர்த்தியை  வலியுறுத்தும் நிலை இன்று. அதுவும் காமெராவை ஜூம் செய்வது, க்ளோசப், டிராலி ஷாட் பேன் செய்வது..ஓவர்லாப் என்றெல்லாம் பல டெக்னிக் உத்திகள் வந்து கிட்டத்தட்ட கதையே வாசிக்க வேண்டாம் என்ற நிலை உதயமாகி விட்டது.
1982 நவம்பர் 28 திலீப்குமார் திருமண வரவேற்பில் 
ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே  ஜூம் செய்வது, க்ளோசப், டிராலி ஷாட் என்றெல்லாம் டெக்னிக் வைத்து பாத்திரங்களுக்கு உயிர்ப்பும் ஐம்புலன் நுகர்ச்சி வெளிப்பாடுகளும் வழங்கி அவர்களை நம்மிடையே நடமாட வைத்து விடுகிறார்.
பப்லுப் பாட்டி என்ற பாத்திரத்தின் உருவத்தோற்றத்தை கேரிகேசர் என்ற கோட்டோவிய முறை மூலம்  நம் முன் கொண்டு வந்து விடுகிறார் 
பப்லுப் பாட்டிக்கு பாரியான சரீரம். நரைத்திட்டான சிறு கொண்டை. நீண்ட பெரிய மூக்கு. மெலிதான எஃகு பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. கழுத்தில் துளசி மாலை.  செக்கச்செவேலென்று பழம் போல் இருப்பாள்.
மாதுரியின் பாத்திர அறிமுகம் 
 நான் பூஜை முடிப்பதற்குள் கடலை மாவு பிசைந்து முருங்கைக்காய் கறியைச் செய்து முடித்துவிடு என்று அவள் தான் சற்று முன் கூறியிருந்தாள். கடலை மாவு கமகம என்று வறுபட்ட வாசனையைக் கிழவி மோப்பம் பிடிக்காமலா இருந்திருப்பாள் சமையலறைக் கதவருகே, தன் முக்காட்டை நழுவ விடாமல் இரு விரல்களால் பிடித்தபடி, வழக்கமான கோணத்தில் வழக்கம் போல் அமைதியாக நின்றாள் மாதுரி.
பூனையைப் பார்த்ததும் பப்லிப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை, “அரே…அரே… பிலாடி…பிலாடி…. மதூ பிலாடி… மதூ பிலாடி” ( பிலாடி - பூனை, மதூ - மாதுரி.) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக் கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது.  பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள். பூனை லாவகமாக நகர்ந்து மறைந்தது.
பப்லுப் பாட்டியின் கேரக்டர் சட்டென்று மனசில் ஒரு பூத்தையல் மிஷின் அழுத்தத்தைக்கிற மாதிரி ஒரு வர்ணனை 
சமையலறைக் கதவருகே இருக்கும் கண்ணாடிச் சட்டமிட்ட ஒரு தேக்கு அலமாரி முன் உட்கார்ந்துகொள்வாள். அலமாரியைத் திறந்தால் சின்னச் சின்ன விக்ரஹங்கள் ஜரிகைத் துணி அணிவிக்கப்பட்ட, குட்டிக்குட்டி மெத்தைகள் மேல் உட்கார்ந்திருக்கும். பாட்டி எல்லாவற்றையும் முறையாக வெளியே எடுப்பாள். ஜரிகை உடைகளைக் கழற்றிவிட்டு, விக்ரஹங்களுக்கு ஸ்நானம் செய்விப்பாள். வெல்வெட் துணியால் அவற்றைத் துடிடைத்து, பிறகு பெரிய பிஸ்கட் டப்பாவிலிருந்து புதிய வஸ்திரங்களை எடுத்து நிதானமாக அணிவிப்பாள். பிரதான விக்ரஹமான பாலகிருஷ்ணணுக்குக் கட்டை விரல் சுற்றளவில் ஒரு ஜரிகைத் தொப்பியும் இருக்கும். குங்குமப்பொட்டு வைத்து முடித்த பின் மீண்டும் அவற்றைக் குட்டிக் குட்டி மெத்தைகள் மேல் உட்கார வைப்பாள்.  பிறகு, அலமாரிக்கு முன் ஒரு பலகை மேல், ஒரு பெரிய தாம்பாளத்தில் அன்றைய உணவு வகைகள் எல்லாவற்றையும் சிறு சிறு கிண்ணங்களில் வட்டமாக அடுக்கி வைப்பாள். ஒரு கிண்ணத்தில் சின்னச் சின்ன பீடாக்கள் கூட இருக்கும். சற்றுக் கழித்து தீபாராதனை காட்டி, மணி அடித்து, ஜெய ஜெகதீஸ்வர ஹரே மெட்டில் ஒரு பஜனை பாடி அலமாரியை மூடிவிடுவாள். அதற்குப் பிறகு தான் பச்சைத் தண்ணீர் கூடக் குடிப்பாள்.

கிரியா அலுவலகத்தில் 

பப்லுப் பாட்டியின்  மார்க்க ஞான மேதாவிலாசம் குறித்து -
பப்லுப் பாட்டியை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்திற்கு அபார பிரக்யாதி ஏற்பட்டிருந்தது. ஆன்மீக விஷயங்களில் கரை கண்டவள் என்று பெயரெடுத்திருக்கிறாள். அதிலும் குறிப்பாக, புஷ்டி மார்க்க நியம நிஷ்டைகளில் அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. என்ன பிரச்சினைக்கு என்ன விரதம், என்ன பூஜைக்கு என்ன பலன், சிரார்த்தத்திற்கு, திருமணத்துக்கு, வளைகாப்புக்கு, நவராத்திரிக்கு, நலங்குக்கு என்று எல்லா வைபவ விதிமுறைகளும், பரிகார உப விதிமுறைகளும் அவளுக்கு அத்துபடி. பாகவதத்தைத் தலைகீழாக ஒப்பிப்பாள். தத்தவ விசாரத்தில் கூட அதன் நுட்பமான எல்லைகள் வரை சென்று வாதிடுவாள். (சில வாரங்களுக்கு முன்பு, புஷ்டி மார்க்கம் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்த ஒரு மாணவி பரோடாவிலிருந்து வந்து இவளுடன் பேசித் தெளிந்து விட்டுப் போனாள்) ஒரு விசேஷத்திற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் அங்கு மந்திரம் சொல்ல வந்திருக்கும் பிராமணர்கள் கூட உஷாராக இருப்பார்கள்.

எந்தப் பகுதியில் கதை நடக்கிறது என்ற விவரிப்பில் ஒரு சிறிய கால விளக்கம் உண்டு 
தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் பின் புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம் ப வடிவில் வ்நதது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் அக்ரஹாரத்தில் ஒரு பூனைக்கூட நுழைந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும்.  அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்க சாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது கொண்டித்தோப்பிலோதான் பார்க்க நேரிட்டது. ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகள் நுழையாததற்குச் சூழலியல் காரணங்கள் என்பதைவிடவும், தத்துவார்த்தக் காரணங்கள் தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அக்ரஹாரவாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள். தென்களை வைஷ்ணவர்களுக்குப் பூனைகளின் மீது இருக்கக்கூடிய அபிமானம் புஷ்டி மார்க்கிகளிடம் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. பாலகிருஷ்ண பிரதானமான புஷ்டி மார்க்கத்திலும பஷுபட்சிகளிடம் அன்பு என்ற உப கோட்பாடு இருப்பது வாஸ்தவம் தான். ஆனாலும், பாலித்தின் பைகளையும், சினிமா போஸ்டர்களையும் தின்று, கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்.கிருஷ்ண பரமாத்மனே ஒரு மாட்டுக்காரன் தானே! பூனைகளின் உள்ளுணர்வு இந்தப் பேருண்மையைச் செம்மையாக விளங்கிக்கொண்டிருந்தது போலும் - அஃதாவது சென்ற ஏப்ரல் மாதம் வரை.
மே மாதம், மேற்கூறிய கிழட்டு பெட்டைப் பூனை எதேச்சையாக அக்ரஹாரத்தில் நுழைந்ததை யாரும் எதேச்சையாகக் கூடக் கவனிக்கவில்லை. அக்ரஹாரத்தின் 24 மத்திய வர்க்கக் குஜராத்திக் குடும்பங்கள் வாழும் 25 ஆம் எண் கட்டடத்தில், முதல் மாடியில் 9 ஆம் எண் வீட்டின் முன்னறையில் பப்லுப் பாட்டி பூஜைக்குப் பால் எடுத்து வைத்து விட்டு பாலகிருஷ்ணணுக்காக பீடா தயாரிக்க வெற்றிலையைக் கழுவ உட்கட்டுக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் துல்லியமாகப் பிரசன்னமாகி, தயக்கமின்றி உள்ளே புகுந்து ஒரு முழுக் கிண்ணப் பாலை நக்கித் தீர்த்துவிட்டு எதுவுமே நடக்காதது போல் அது திரும்பிக் கொண்டிருந்த போது தான் முதல் முறையாகக் கண்ணில் பட்டது.
பூனையைப் பார்த்ததும் பப்லுப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை, “அரே…அரே… பிலாடி…பிலாடி…. மதூ பிலாடி… மதூ பிலாடி” ( பிலாடி - பூனை, மதூ - மாதுரி ) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக் கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது. பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள். 
கில்லாடிப் பூனை பற்றிய அறிமுகம் 
தன் மாமியாரின் பூஜைக்கு இப்படி அடிக்கடி பங்கம் ஏற்படுவது குறித்து அவளுக்கும் வருத்தம் தான். சென்ற ஆறு முறையும் இப்படித்தான் நிகழ்ந்தது. விளக்குத் திரி எடுக்க, பருப்பு சாதம் பிசைய, பழங்கள் நறுக்க, தீப்பெட்டி எடுக்க என்று பப்லிப் பாட்டி உட்கட்டுக்குள் மறைந்த ஓரிரு நிமிடங்களில் சொல்லிவைத்தாற்போல் வந்து கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டுப் போய்விடும் அந்தக் கிழட்டுப்பூனை.
பப்லிப் பாட்டியின் மகன் நட்டூ (என்கிற நட்வர் லால்)பற்றிய அறிமுகம்   -
நட்டூ பார்ப்பதற்குத்தான் போலீஸ்காரன் போல் வாட்டசாட்டமாக இருப்பானே ஒழிய சரியான அசமந்தம். சத்தம் போட்டு பேசக்கூடப் பயப்படுவான். செம்புதாஸ் தெருவில் ஒரு மார்வாடி வியாபாரிக்கு 2 ஆம் நம்பர் கணக்கு எழுதுகிறான். நட்டூ 1 ஆம் நம்பரில் ஆயிரமும் 2 ஆம் நம்பரில் ஆயிரமும் சம்பளம் வாங்குகிறான். வம்புதும்பு, பீடி சிகரெட், சினிமா - டிராமா எதுவும் கிடையாது. அவன் உண்டு. அவன் வேலையுண்டு. அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் உடை மாற்றி, டீ சாப்பிட்டுவிட்டு ஹவேலிக்குப் போய் விடுவான். இரவு எட்டு மணிக்கு மேல் தான் திரும்புவான். சனிக் கிழமை மட்டும் இரவு பத்து மணிக்கு பஜனைக்குப் போவான். குஜராத்தி வருஷப்பிறப்பு அன்று மாதுரியை சினிமாவுக்கோ பீச்சுக்கோ அழைத்துச்செல்வான்.
“என்ன பா சொல்கிறாய்! பூனையைக் கொல்வது பாவமில்லையா?” என்று பதறினான் நட்டூ.
“அட உப்பில்லாதவனே, பூனையைக் கொல்லவா சொன்னேன். அந்த கழுதையை எங்காவது விரட்டி விட்டு வா என்கிறேன்.  பூனையைக் கொல்வது பாவம் என்று எனக்குத் தெரியாதா… பேசுகிறான் பார்.”
“எங்கேயென்று போய் விரட்டுவது, பா? விரட்டுவதற்கு முதலில் அது கண்ணில் பட்டால்தானே. எல்லாம் உன் அஜாக்கிரதையினால் தான். பூஜை பண்ணுகிறேன் என்று ஊருக்கு முன்னால் பால் கிண்ணத்தை எடுத்து வந்து நடுக் கூடத்தில் வைத்துவிட வேண்டியது. அப்புறம், ஹாய் ஹாய் என்று அலற வேண்டியது.” (ஹாய் - அய்யோ) 
“போதும் போதும், ரொம்ப சமர்த்தாகாதே. பூஜை எப்படிப் பண்ணுவது என்று இனி நான் உன்னிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
சரி சரி, விடு. சூரியிடம் சொல்கிறேன். அவன் தான் இந்த மாதிரி வேலைக்கு லாயக்கு.
“உன் மூளை பிசகித்தான் விட்டது! போயும் போயும் அந்த துஷ்டப் பயலா. அந்த அக்கிரமி பூனையை நிஜமாகவே கொன்றாலும் கொன்று போட்டு விடுவான். ஜாக்கிரதை”
“நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் நட்டூ தீர்மானமாக.
மைத்துனர் மற்றும் மைத்துனர் மனைவியுடன் 
சூரி பற்றியஅறிமுகம்   -
 சூரி - பப்லிப் பாட்டியின் தம்பி ரஞ்சித் சிங்கின் மூத்த மகன் சுரேந்திரன். வேலைவெட்டி இல்லாதவன். பளிச் சென்று உடைகள் அணிந்து, நண்பர்கள் புடை சூழ, கல்கத்தா பீடாவை ஓயாமல் குதப்பிக் கொண்டு உற்சாகமாகத் திரிந்து கொண்டிருப்பான். குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளின் எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் சரளமாகப் பிடிக்காது. ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டவன். அக்ரஹாரத்தில் எல்லாத் தப்புத்தண்டாவுக்கும் அவன் தான் கட்டைப் பஞ்சாயத்து. நீதிக்குப் பின்தான் சாதி என்ற அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு, அக்ரஹாரத்திற்குப் பூ விற்க வந்த பெண்ணிடம் வம்பு செய்த ஒரு குஜராத்தி நடுவயதுக்காரரின் சைக்கிளைச் சேறும் பாசியும் படிந்த கோயில் தெப்பக்குளத்திற்குள் தூக்கிக் கடாசிவிட்டான்.
மாதுரியின் பாத்திர வார்ப்பு -
சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டிருந்த மாதுரிக்குத் தாயும் மகனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அவள் அந்த வெள்ளைப் பூனையை நினைத்துக்கொண்டாள். அந்த வயதான பூனை முகம் தளர்ந்து, தோல் சுருங்கி, ரோமம் உதிர்ந்து சாகக் காத்திருக்கும் பாவனையில் பரிதவித்துக் காணப்படும். அது உற்றுப் பார்த்தபோது திடீரென்று ஏதாவது பேசத் துவங்கிவிடும் என்று கூடத் தோன்றும் அவளுக்கு. பப்லிப் பாட்டி வீட்டில் இல்லாத பல சமயங்களில் அது முன் கதவருகே வந்து களைத்துப் போன குரலில் மியாவ் என்று வாயைப் பிளந்து காட்டும். தவறாமல் ஒவ்வொரு முறையும் அதற்குப் பால் கொடுத்திருக்கிறாள் மாதுரி. ஒரு வகையில் தனக்கும் அந்தப் பூனைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று நினைத்தாள். அந்தப் பூனைபோலவே தானும் பதுங்கிப் பதுங்கி வாழ்வதாகப்பட்டது. அந்தப் பூனைக்குக் குட்டிகள் இருக்குமா? நிச்சயம், அதன் பருவத்தில் அது ஓரிரு குட்டிகளையாவது ஈன்றிருக்கும். அல்லது ஒருவேளை அதுவும் தன்னைப் போல் மலடுதானா. அதன்நிராதரவான சின்ன வாழ்க்கையின் சின்ன சாகஸங்களைப் போல் தான் தன் வாழ்க்கையிலும் என்று நினைத்தாள் மாதுரி . பூனைக்கு ஒரு கிண்ணம் பால் என்பது தனக்கு ஒரு புடவை அல்லது கடற்கரையில் ஒரு மாலை அல்லது ஒரு இந்திப் படம். அந்த பூனையைப் போலவே தானும் ஒருநாள் முதிர்ந்து சிதைந்துவிடுவோம் என்று தோன்றியது. அந்த பூனையைப் போலவே தன்னையும் ஒரு நாள் தனிமை வாட்டும். அன்புக்கான வாய்ப்பு வயோதிகத்தில் நிச்சயம்இருக்காது. செலுத்துவதற்காக மண்டியா கிடக்கிறது அன்பு. அப்படியானால் யாருடைய இதயத்தில்? பப்லிப் பாட்டியின் இதயத்திலா? தன் கணவன் நட்டூவின் இதயத்திலா? எங்கே..எங்கே பதுங்கிக் கிடக்கிறது அன்பு என்ற அபத்தம்? அந்த கிழட்டுப் பூனையின் பழுப்பு நிறக் கண்களிலா?
மாதுரி ரியாக்சன் 
பிசைந்த சப்பாத்தி மாவைத் திரட்டித் தட்டில் ஓங்கி அறைந்தாள் மாதுரி.
நட்டூவும்பூனையும்  -
நட்டுவுக்குப் பூனை விஷயம் பெரியதாகப் படவில்லை. அவன் அதை உடனே மறந்துவிட்டான். ஹவேலியிலிருந்து திரும்பும்  போது சூரியைப் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது.
மனே கயி தீத்துந்நே நட்டூ பாய்! சம்ஜோ தமாரு காம் தய் க்யூந்” (என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா, நட்டூ அண்ணா. உங்கள் காரியம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.) சூரி உற்சாகமாகக் கூறினான். “நீங்கள் சொன்னால் அந்தப் பூனையை அக்ரஹாரத்தை விட்டு என்ன, அமெரிக்காவிற்கே கூட பாக் செய்ய மாட்டேனா என்ன?”
நட்டூ கலவரத்துடன், அதெல்லாம் வேண்டாம். 25 ஆம் நம்பர் பக்கம் வராமல் செய்துவிடு. அது போதும் என்றான்
[பூனை பாக் செய்யப்படக்கூடாது என்ற இளகிய குஜராத்தி மனசு வெளிப்படும் இடம் இது]
“டன், நட்டூ அண்ணா டன்” என்று ஆங்கிலத்தில் உறுதி அளித்தான் சூரி.
ஹன்ஸ்ராஜ் அறிமுகம் 
மறுநாள் காலை பாட்டியின் மாப்பிள்ளை ஹன்ஸ்ராஜ் வேலை விஷயமாக கொச்சியிலிருந்து வந்து இறங்கினார். அவர் எப்போதும் இப்படித்தான். சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று தான் வருவார்.
பப்லிப் பாட்டி தன் மாப்பிள்ளையை ரொம்பவும் உயர்வாகத் தான் மதித்தாள். அவரிடம் அவளுக்குப் பிடிக்காத விஷயம் அவர் பொடி போடுவார் என்பதுதான். ஹன்ஸ்ராஜூக்கு முப்பத்தெட்டு வயதுதான். பாகவதர் கிராப்போடு முகத்தை மறைக்கும் அடர்ந்த தாடி மீசையுடன் பேண்ட் போட்ட சாமியார் போல் இருந்தார். கல்யாணத்திற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்.
நிம்மு அறிமுகம் -
பப்லுப் பாட்டியின் மகள் நிம்மு, கல்யாணத்திற்கு முன் சாதாரணமாக இருந்தவள், கல்யாணம் ஆனவுடன் திடீரென்று உடல் பருக்க ஆரம்பித்துவிட்டாள். முதலில் ஏதோ கல்யாணமான சந்தோஷத்தில் தான் உடல் பருக்கிறது என்று நினைத்தார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவள் ரொம்பவும் குண்டாகிப்போன போதுதான் அது ஏதோ வியாதி என்று தெரிந்தது. ஹன்ஸ்ராஜுக்குப் பூர்வீகச் சொத்தும் இருந்ததோடு அவரும் நிறையச் சம்பாதித்தார். தன் மனைவிக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். பயன்இல்லை. நிம்மு முப்பது வயதில் அசாத்திய குண்டாகிவிட்டாள். ஜாக்கெட் தைக்க 2 ¼ மீட்டர் துணி தேவைப்பட்டது. ஆட்டோவில் அவள் ஒருத்திதான் உட்கார முடியும். பத்து அடி நடப்பதற்குள் மூச்சுவாங்கும். வீட்டில் கூட அவள் உட்கார்ந்தோ தவழ்ந்தோதான் காரியங்களைச் செய்வாள். அவளது உடல்வாகிற்கு அனுகூலமான வகையில் சமையல் கட்டையே மாற்றி வைத்திருந்தார் ஹன்ஸ்ராஜ்.
நிம்மு தன் பருமனைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டாள். சிரிக்கச் சிரிக்க எல்லோரிடமும் அன்பு பாராட்டுவாள். அவளுடன் பத்து நிமிடம் பழக நேர்பவர்கள் கூட நெகிழ்ந்து துடித்துவிடுவார்கள். விருந்தினர்கள் வரும்போது, சமையலறைக்குள் ஒரு சிறு குழந்தையைப் போல் தவழ்ந்து தவழ்ந்து காரியங்கள் செய்து உபசரிப்பாள். அதிகம் போனால் அவள் இன்னும் பத்து ஆண்டுகள் தான் உயிர் வாழ்வாள் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். நான் செத்தால் என்னை தூக்குவதற்குப் பதினாறு பேர் தான் வர வேண்டும் என்று சொல்லி கெக்கெக் கெக்கெ என்று சத்தமாக சிரிப்பாள் நிம்மு. ஹன்ஸ் ராஜூக்கு தன் நிம்மு மீது உயிர்.
ஹன்ஸ்ராஜ் தங்கியிருந்த ஒரு வாரமும் பூனை பப்லிப் பாட்டி வீட்டுப்பக்கம் வரவில்லை. மாப்பிள்ளைக்கு உபசரணை செய்யும் மும்முரத்தில் பாட்டி கூட அதை மறந்துவிட்டிருந்தாள்.
ஹன்ஸ்ராஜ் ஊருக்குக் கிளம்பும் போது நிம்முவுக்குப் பிடித்த பட்சணங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொடுத்தாள்.
“இந்த தீபாவளிக்காவது நிம்முவை அழைத்து வர முடியுமா என்று பாருங்கள் என்றாள்.
அவள் நிலமைதான் உங்களுக்குத் தெரியுமே. அவள் வருவதென்றால் வேன் வைத்துதான் அழைத்து வர வேண்டும். அதற்கு நீங்களே பேசாமல் கொச்சிக்கு வந்து ஒரு வாரம் தங்கிவிட்டுப் போங்களேன். உங்களுக்கும் மாறுதலாக இருக்கும்.”
என்ன மாறுதல் போங்கள். நீங்கள் சொன்னால் ஆகிவிட்டதா? நான் கிளம்பி விட்டால் வீட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? இவளுக்கும் துப்பு கிடையாது. கவர்னர் பட்வாரிக்குக் கூட நேரம் கிடைத்துவிடும். எனக்கு எங்கே?” என்று மருகினாள் பாட்டி.
வாசல் பக்கம் நட்டூ ரிக்ஷாக்கூடக் கூட்டி வந்துவிட்டான்.
வாசல் வரை வந்து வழியனுப்பிய பாட்டி, தன் மகளை நினைத்து, வந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். போய்வருகிறேன் சகோதரி என்று மாதுரி யைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஹன்ஸ்ராஜ்
சூரி யுடன்  கிழட்டுப்பூனை-
பத்து நாட்கள் கழித்து, திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 25 ஆம் எண் கட்டடத்திற்குச் சூரி வந்தான் அந்த கிழட்டுப்பூனையுடன். பப்லுப் பாட்டி வீட்டுக் கதவருவே வந்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் அவனைச் சூழ்ந்துக்கொண்டார்கள். சூரியின் மடக்கிய இடது கைக்குள், அவன் மார்பில் தலைசாய்த்து ஒரு குழந்தையைப் போல் ஒடுங்கிக்கொண்டிருந்தது பூனை.
''என்ன ஜாலம்டா இது! திருட்டுச் சனியன் உன்னிடம் இப்படிக் குழைகிறதே” என்று வியந்தாள் பப்லுப்பாட்டி.
''அதுதான் சூரி தெரிந்துகொள்ளுங்கள். இந்த பத்து நாட்களில் ஐந்து லிட்டர் பாலையும் எட்ட டபுள் ஆம்லெட்டுகளையும் விழுங்கியிருக்கிறது இது. பூனையை வசியம் செய்வதென்றால் சும்மாவா! கொண்டு போய் விடுவதற்கு முன் உங்களிடம் காண்பித்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். சொல்லுங்கள் அத்தை, எங்கே கொண்டு போய் விடட்டும். திருவொற்றியூரிலா திருவான்மியூலா?
சூரி தன் வலது கையால் முதுகைத் தடவிக் கொடுக்கக் கொடுக்க, பூனை புதுப்பெண் போல் கூச்சத்துடன் நெளிந்து நெளிந்து காட்டியது.
பூனையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பப்லிப் பாட்டி, ஏதோ தீர்மானித்தவள் போல், டேய் சூரி போய்விடாதே, இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்றாள். தன் மாப்பிள்ளை மறந்து விட்டுச் சென்ற பொடி டப்பியைத் தேடினாள்.
அவசரமாகத் திரும்பி வாசலுக்கு வந்தாள். ரகசிய பாவத்துடன் கையசைத்துச் சூரியை அருகே வரச் சொன்னாள். பின் தாழ்ந்த குரலில் பூனையைத் தன்னருகே கொண்டு வரும்படி சொன்னாள். சூரி பூனையின் வயிற்றைப் பிடித்தபடி அதை பாட்டிக்கு முன் நீட்டினான். 


பப்லுப்பாட்டி பூனை எப்படித் தண்டித்தாள் என்று இங்கே சொல்வது கதை வாசிக்க வேண்டிய உங்கள் உற்சாகத்தைக் கெடுத்து விடும்.நீங்களே வாசிப்பது நல்லது. 
திலீப்குமாரின் நகைச்சுவை ரசம் எந்த வகை? வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கும் வகை. மர்மப் புன்முறுவல் , நமுட்டுச் சிரிப்பு ரகம். 
அடுத்த முரணான புஷ்டிமார்க்க தத்துவமும் நடைமுறையும் குறித்து சொல்வழியாக  அன்றி பப்லுப்பாட்டியின் செயல் வழி அணுகுமுறையை திலீப் குமார் அணுகும் விதம்  
அன்று மாலை பாட்டியைப் பார்க்க யாரோ வந்தார்கள். பப்லுப் பாட்டி ஆரம்பித்தாள். “புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்..”

Tuesday 19 July 2016

ரமாவும், உமாவும்

[திலீப் குமார் பற்றிய இந்தப் பதிவுகளில் என் கருத்துக்களோடு அவரைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகில் பிறர் சொன்ன பதிவுகளையும்  இணைப்பது ஒட்டு மொத்தப்பார்வைக்கு  உதவும்.  முக்கியமாக சொல்வனம் இதழில் திரு.சேதுபதி அருணாசலம் வழங்கிய கருத்துக்கள் தனித்தன்மை வாய்ந்தவை அவற்றை சொல்வனம் இதழுக்கும், திரு.சேதுபதி அருணாசலத்திற்கும் நன்றி தெரிவித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.] 
 திலீப் குமாரின் ‘ரமாவும், உமாவும்’ என்ற புத்தகம். திலீப் குமார் மிகக்குறைவாகவே எழுதக்கூடியவர்.  கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக சிறுபத்திரிகை வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட, மரியாதைக்குரிய எழுத்தாளராக இருந்தாலும், அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுதி இதுதான். இதிலும் மொத்தம் நான்கு படைப்புகள்தான். அதில் ஒன்று ‘ரமாவும், உமாவும்’ என்ற குறுநாவல்.
நூலின் மேலட்டை 

இக்கதையைப் படிக்க ஆரம்பித்தபோது எனக்குப் பெரிய அதிர்ச்சிதான் ஏற்பட்டது. ரமா, உமா என்ற இரண்டு குஜராத்தி நடுவயது குடும்பப்பெண்கள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவதில்தான் கதை ஆரம்பிக்கிறது. அதையெல்லாம் பேசக்கூடாது என்று நினைக்கும் ஆசாரசீலனல்ல நான். ஆனால், இக்கதை சொல்லப்பட்டிருப்பது வெறும் உரையாடல்களால் மட்டுமே. (திலீப்குமாரின் ‘நிகழ மறுத்த அற்புதம்’ கதையின் பாணி.) ஆகவே, அதில் சூழலை விவரிக்கும் விவரணைகளோ, உணர்ச்சிகளை கதைசொல்லியின் பார்வையில் சொல்லும் பகுதிகளோ கிடையாது. அந்த இரு பெண்கள் உடலுறவு குறித்து உரையாடிக்கொள்வதும், கலவியின்போது பிதற்றிக்கொள்வதும், உடல் பாகங்களை வர்ணிப்பதுமாகவே கழிந்தது. இதை எழுத திலீப்குமார் எதற்கு? அதற்குத்தான் எத்தனையோ ‘பின் நவீன’ எழுத்தாளர்கள் இருக்கிறார்களே என நினைத்துக்கொண்டேன்.
ஆனால் முதல் பகுதி முடிந்ததும், மெல்லிய புன்னகையோடு திலீப்குமார், கதைசொல்லி என்ற பெயரில் பேச ஆரம்பிக்கிறார்.
                                                                             
திலீப்குமார்  -மலேஷியாவில் 2003ல்  
ரமாவும், உமாவும் கோபமாகக் கதைசொல்லியிடம் முறையிடுகிறார்கள். ‘எங்களை எதற்கு இப்படி ஓரினச்சேர்க்கையாளர்களாகப் படைத்திருக்கிறீர்கள்? எங்களுக்கு இது பிடிக்கவேயில்லை.’ என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்கு கதைசொல்லி சொல்கிறார்: ‘நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். எனக்குக்கூட வருத்தமாக இருக்கிறது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை. தவிர அது இலக்கிய விவகாரம். சொன்னாலும் உங்களுக்குப் புரியாது.’ என்று சொன்னபின் அந்த ‘இலக்கிய விவகாரத்தை’ விளக்குகிறார்.
‘இப்போது போய் யாராவது யதார்த்தக் கதையை எழுதுவார்களா? எழுதினால் காறித்துப்பிவிடுவார்கள். உங்களுக்குத் தெரியாது. தொண்ணூறுகளுக்குப் பிறகு இலக்கிய நிலவரமே மாறிவிட்டது. தலித் எழுத்தாளர்கள் கதைகள் எழுத ஆரம்பித்த பின் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்க, நடுத்தர சாதி எழுத்தாளர்களின் சாயம் முற்றிலுமாக வெளுக்கத் தொடங்கிவிட்டது. இது ஒரு நெருக்கடியான நேரம். 60/70-களில் கூட இந்திய இலக்கியத்திற்கு இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது இந்தியப் பாத்திரங்கள் ஏதோ இரண்டாம் உலகப்போரில் வதைபட்டுத் திரும்பியவர்கள் போல் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு இருளிலும், மெளனத்திலும் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
நல்லவேளை, நாங்கள் ஐரோப்பாவிலிருந்து கரீபியனுக்கு ஏற்கெனவே நகரத் தொடங்கி விட்டிருந்தோம். அதோடு வராது வந்த மாமணி போல், மார்க்குவேஸ்ஸும் அப்போது வந்து சேர்ந்தார். அதன்பின்தான் நாங்கள் கொஞ்சம் இளைப்பாற முடிந்தது. மாயம், மந்திரம் என்று ஜரூராக களத்தில் இறங்கிவிட்டோம். அப்போது எங்கள் பாத்திரங்கள் ராமேஸ்வரம் கடற்கரையில் லத்தீன் அமெரிக்கர்களைப் போல் சிந்தித்துக்கொண்டு அலைந்ததையும் கூட மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். யார் கண் பட்டதோ? இப்போது அதுவும் அலுத்துப் போய்விட்டது. நாங்கள் என்னதான் செய்வது? இந்த உலகமயமாக்கல் வேறு பாடாய்ப் படுத்துகிறது. எங்கள் அரசியல் பார்வைகளை எல்லாம் இது முற்றிலும் காலி செய்துவிட்டது. அதனால்தான் இப்படி எல்லாம் எழுதித் தடுமாற வேண்டியிருக்கிறது.’
சமகால இலக்கியப்போக்கைக் குறித்து முற்றிலும் பகடியாக, தான் எழுதும் கதையையும் கூட அதில் சேர்த்து, விஷமப்புன்னகையோடு பேசுகிறார் திலீப்குமார். இக்கதை தரங்கம்பாடியில் நடப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. “ரமாவும், உமாவும் பெங்களூருவில் உள்ள சங்கம் ஹவுஸ் அறக்கட்டளையின் சார்பில் ஆகஸ்ட் 2011-இல் தரங்கம்பாடியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் முகாமில் பங்கேற்றபோது எழுதப்பட்டது,” என்று புத்தக முன்னுரையில் சொல்கிறார் திலீப்குமார். இக்குறுநாவலைப் பற்றிய முக்கியமான குறிப்பாக அதை நான் படிக்கிறேன். இக்குறுநாவலை - ஒரு இலக்கியப் படைப்பு உருவாகும் விதம், அதை ஆரம்பிக்கும் விதம், மையப்பகுதி, உச்சம், உரையாடல்கள் இவற்றைக் குறித்து கற்றுத்தரும் ஒரு முயற்சியாகவே திலீப்குமார் உருவாக்கியிருப்பார் என்று கருதுகிறேன்.
கதாபாத்திரங்களும், கதை சொல்லியும் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகள் பூராவுமே படைப்பு உருவாக்கத்தின் சூட்சுமங்களையும், அதை உருவாக்கிய விதங்களையும் குறித்தே உள்ளன. அதற்கு வசதியான விதத்தில் திலீப்குமார் எடுத்துக்கொண்டிருக்கும் கருதான் கதாபாத்திரங்களே எழுத்தாளனிடம் குறை சொல்லிப் புலம்புவதும், எழுத்தாளன் காரணங்களை விளக்கி சம்பாஷணைகளைப் பற்றிப் பேசுவதும். சரி, இதை வெறுமனே உத்தியைச் சொல்லிக் கொடுக்கும் படைப்பு என்று வரையறுத்துவிட்டால், இங்கே பெண்களைப் பற்றிப் பேசுவதும், அவர்களின் திருப்தியின்மை, அதன் விளைவாக நடுவயதுக்கு மேல் வேறொரு பெண்ணோடு சேர்ந்து உச்சத்தைக் காணுதல் - இதெல்லாம் வெறும் கவனக்கலைப்புகளா? அந்தத் தொடர்பை நாம் இக்குறுநாவலின் பகுதி இரண்டில் பெற்றுக்கொள்ள முடிகிறது.
உமா கொஞ்சம் பயந்த சுபாவி. கணவனுக்கும், குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும் பயந்து அடங்கிப் போகிறவள். ஆனால் ரமா கொஞ்சம் தைரியசாலி. அதே சமயம் வாழ்க்கையில் அதீதமாக எதையுமே பார்த்திராதவள். இருவருக்குமே ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயமும், ஆர்வமும் உண்டு. உமாவின் சிறுவயது ஏழ்மையில் உழன்றிருப்பது. இருமுறை தற்கொலைக்குக் கூட முயற்சித்திருக்கிறாள் . முதல் தற்கொலை முயற்சியைப் பற்றி எந்த அலங்காரப்பூச்சோ, விவரணையோ இல்லாமல் வெறுமனே அப்பெண் பேசுவதாக விவரித்திருப்பது கூட மனம் பதைபதைக்க வைக்கிறது.
“அப்போது, நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் என் தம்பி மற்றப் பையன்களோடு தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். ஒரு பையனுக்கும், இவனுக்கும் சண்டை ஏற்பட்டு இவன் அவனை நன்றாக அடித்துவிட்டான். கீழே விழுந்ததில் அந்தப் பையனுக்கு அடிபட்டு முழங்காலிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. என் தம்பி பயந்துபோய் வீட்டிற்குள் வந்து ஒளிந்துகொண்டான். சுமார் பதினைந்து நிமிடம் கழித்து, அடிபட்ட பையனின் குடும்பத்தினர் ஒரு பெரிய படையாகத் திரண்டு எங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டார்கள். தெருவில் நின்று கொண்டு உரத்த குரலில் திட்டத் தொடங்கிவிட்டார்கள். எங்கள் விதவைத் தாயாரால் அவர்களை சமாதானப்படுத்தவே முடியவில்லை. உலகில் உள்ள எல்லா ஆபாசமான வசைகளையும் பொழிந்துகொண்டிருந்தார்கள். காதால் கேட்க முடியாத, மிக மிக அசிங்கமான வார்த்தைகள் அவை. என் அம்மாவையும், என்னையும் குறித்த வசைகள்தான் அதிகம். என் வாழ்க்கையில் அது போன்ற ஒரு கொடூரமான ஆபாசப்பேச்சை நான் கேட்டதே இல்லை. இது நடந்துகொண்டிருந்தபோது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாருமே இதைத் தடுக்க முன் வரவில்லை.
எங்கள் அம்மா மிகவும் சிறுமைப்பட்டு நிலைகுலைந்து போனாள். என் தம்பியை கண்மண் தெரியாமல் பயங்கரமாக அடித்துவிட்டாள். அவமானம் தாங்காமல், இரவு வரை அழுதுகொண்டே இருந்தாள். பின் திடீரென்று, ‘நாம் எல்லோருமே தற்கொலை செய்துகொள்வோம்’ என்றாள். என் வீட்டிலிருந்த ஷன்வயலட் என்ற பெரிய மருந்து பாட்டிலை எடுத்து வந்து சிறிய கிண்ணங்களில் ஊற்றி எல்லோருக்கும் - அண்ணன், நான், தம்பி, என் சிறிய தம்பி - கொடுத்தாள். அவள் பாட்டிலிலிருந்து நேரடியாகக் குடித்தாள். நாங்கள் எல்லோரும் அழுதுகொண்டே அந்த திரவத்தைக் குடித்தோம். பின் எங்கள் அம்மா எங்களைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.
நல்லவேளை நாங்கள் குடித்த திரவம் நீர்த்துப் போயிருந்தது. நாங்கள் சாகவில்லை. மாறாக, ஒரு மணி நேரம் கழித்து எங்கள் எல்லோருக்கும் வாந்தியும், பேதியும் பிடுங்கிக்கொண்டது. இரண்டு மூன்று நாட்கள் வரை எங்கள் எல்லோருடைய உதடுகளில், பற்களில், நாக்குகளில் வயலட் நிறம் படிந்திருந்தது. நாங்கள் சிரித்தால் ஏதோ டிராகுலாக்கள் சிரிப்பது போலிருந்தது.”
வயலட் நிற வாயோடு அந்தக் குடும்பம் இரண்டு மூன்று நாட்கள் எப்படிக் கழித்திருக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தேன். சிறுவர்கள் விளையாடச் செல்லும்போது, நண்பர்கள் கேலி செய்திருப்பார்கள். அந்த அம்மாவோ, வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள், காய்கறி விற்பவர்கள் - இப்படி யாரிடமுமே முகம் கொடுத்து பேசமுடியாமல் போயிருக்கும். ஒரு அவமானத்தைக் களைந்துகொள்ள முயற்சித்தால், அந்த அவமானமே ஒரு உருக்கொண்டல்லவா உடல் மீது ஒட்டிக்கொண்டது? அத்தனையும் மீறி நாங்கள் சிரித்தால் டிராகுலாக்கள் சிரிப்பது போலிருந்தது என்று சொல்கிறாள் உமா. அக்காவும், தம்பிகளும் ஒருவர் வாயை மற்றவர்கள் கேலி கூட செய்துகொண்டிருக்கலாம்.
 நான்-லீனியர் பாணியில் காலத்தில் முன்னும் பின்னுமாய் ஓடிச்செல்லும் கதை. திலீப்குமாருடையது காமத்தில் ஆரம்பித்து, சாதாரண குஜராத்திப் பெண்களின் குடும்பத் துயரை, தனிமையை, அக வெறுமையைப் பேசும் குறுநாவல். இதை நேரடியாகச் சொல்லாமல் இந்த வடிவில் சொல்வதற்கான காரணம் குறுநாவலில் கதை சொல்லி சொல்வதைப் போல், இப்படி எழுதுவதுதான் இப்போதைய ட்ரெண்ட்.
இது சந்தேகமில்லாமல் பின்நவீனத்துவ படைப்புதான். ஆனால் இந்தியச் சூழ்நிலையில் எது பின் நவீனத்துவமாக இருக்க முடியும் என்று யோசிக்க வேண்டும். மேற்கில், மரபைத் துண்டித்துக் கொண்டு நவீனத்துவம் ஒரு கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டுடன் ஒவ்வொரு துறையிலும் உருவாகியுள்ளதாகத் தோற்றம் தருகிறது. அங்கே பின்நவீனத்துவம் என்பது எப்படி நிகழ்கிறதோ அப்படியே இங்கும் இருக்க வேண்டியதில்லை.
இங்கே மரபு இன்னும் தொடர்கிறது. நவீனத்துவம் இப்போதுதான் கட்டமைக்கப்பட்டு வருகிறது - இதுதான் பெண்ணியம், இதுதான் இந்துத்துவம், இதுதான் ஜனநாயகம் என்பன போன்ற விஷயங்கள் முரண்பாடுகளற்ற கருத்தாக்கங்களாக இப்போதுதான் உருவாக்கம் பெறுகின்றன. இதுவரை சாதிகளானாலும் சரி, வேறு எதுவானாலும் சரி, இங்கு ஒரு நெகிழ்வு இருக்கிறது - எல்லாம் கலந்து கட்டி இருக்கிறது. அதனால் எந்த விஷயத்திலும் அது குறித்து இது இப்படிதான் என்று வரையறை செய்யும்போது அதில் உள்முரண்பாடுகள் இயல்பான ஒன்றாக இருக்கின்றன, தவிர்க்க முடிவதில்லை. இது பெண்ணியம், இது முற்போக்கு, இது இந்துத்வா, இது இலக்கியம் என்ற கட்டமைப்பு இங்கே இப்போது இன்னும் முழுமை பெறவில்லை: உள்முரண்பாடுகள் பூசி மெழுகப்படுவதே இங்குள்ள நவீனத்தின் இயல்பாக இருக்கிறது. அவை இன்னும் மறையவில்லை, மறைத்து வைக்கப்படுகின்றன.
இங்கு பின்நவீனத்துவம் மேற்கத்திய மாதிரியை வடிவிலும் உள்ளடக்கத்திலும் போலி செய்வதாக இருக்க வேண்டுமா? நாமாக சொந்தமாக பின் நவீனத்துவத்தை முயற்சித்தால் அது எவ்வாறு இருக்க வேண்டும்?
1. படைப்புகள் உள்முரண்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். உள்முரண்களை மறைக்காத படைப்பே சிறந்த ஒரு பின்நவீனத்துவ படைப்பாக இருக்க முடியும்.
2. விமரிசனம் படைப்பின்மீது தீர்ப்பு சொல்வதாக இருக்கக் கூடாது. அதில் உள்ள உள்முரண்களை வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் இன்றைய சமூகம் இப்படித்தான் இருக்கிறது. இதைதான் படைப்புகள் பிரதிபலிக்க வேண்டும், விமரிசனம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
திலீப்குமாரின் இந்தக் குறுநாவல் உள்முரண்கள் நிறைந்து இன்றைய அறிவுச் சூழலை, பொது வெளியைப் பிரதிபலிக்கிறது.  இவை பிறிதொரு கட்டத்தில் பேசப்பட வேண்டிய முக்கியத்துவம் கொண்டவை.
                      உரையாடல்களையும், மொழியமைப்புகளையும் 
                                 திலீப்குமார் கையாண்டுள்ள   விதம். 
இந்தக் குறுநாவலின் இன்னொரு முக்கியமான விஷயம் - இதில் உரையாடல்களையும், மொழியமைப்புகளையும் திலீப்குமார் கையாண்டிருக்கும் விதம். கிட்டத்தட்ட முறைப்படுத்தப்பட்ட (கொச்சையற்ற) தூயதமிழிலேயே ரமாவும், உமாவும் உரையாடிக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இவ்விரு பெண்களும் குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். தமிழ்நாட்டில் வசிக்கும் நகர்ப்புற மத்தியவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் உரையாடிக்கொள்வது ஆங்கிலத்தில் இருக்கிறது. அந்த ஆங்கிலத்தை மொழிபெயர்க்கையில் தூயதமிழில் கொண்டு வருகிறார் திலீப்குமார்.
குறுநாவலில் வரும் கதைசொல்லியாக திலீப்குமாரே அப்படிச் செய்திருப்பதைக் குறித்தொரு பதில் சொல்கிறார்:
“இதில் பல உயர் விஷயங்களும், பல ஏடாகூட விஷயங்களும் இருக்கின்றன. அவற்றை ஆங்கிலத்தில் இலகுவாகச் சொல்லிவிடலாமே என்றுதான் பார்த்தேன். உங்களுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பதென்று தெரியவில்லை. உதாரணமாக, ‘shit’ என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையை மேன்மக்கள் பலர் கூடியிருக்கும் எந்த சபையிலும் நீங்கள் ஆயிரம் முறைக்கு மேல் பிரச்சினையில்லாமல் அழகாகச் சொல்லிவிடமுடியும். ஆனால் இதையே நீங்கள் தமிழில் ஒருமுறை சொன்னாலே, உங்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள். சமீபத்தில் தமிழ்த்திரைப்படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகன், கதாநாயகியைப் பார்த்து, ‘உன்னை சதா புணர்ந்துகொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது’ என்று சொல்கிறான். இதை அவன் தமிழில் சொன்னான் என்றா நினைக்கிறீர்கள்? ‘I want to make love to you all the time’ என்று ஸ்டைலாக ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுப் போகிறான். இந்த வசனம், தமிழ்க் கலாசாரக் காவலர்கள் - யார் கண்ணிலும் படாமல் போனதற்குக் காரணம் அது ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதுதான். தமிழில் சொல்லியிருந்தால் திரையங்கத்தைக் கொளுத்திவிட்டு, இயக்குநரையும் உதைத்திருப்பார்கள். […] இந்திய மொழிகளில், “கதவைப் பூட்டிவிட்டு கடைவீதிக்குப் போகலாம், வா” போன்ற வாக்கியங்களைத்தான் இயல்பாகச் சொல்லமுடியும். மற்றபடி, இந்த ‘உணர்ச்சி’, ‘புணர்ச்சி’ போன்ற விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வதுதான் பதவிசாக இருக்கும். அதனால் நீங்கள் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். நான் அதைத் தமிழ்ப்படுத்திக்கொள்கிறேன்.” என்று சொல்கிறார் கதைசொல்லி
                                         நமது உரையாடலில் உள்ள ஊளைச்சதை
ரமாவும், உமாவும் கதை சில இடங்களில் கவித்துவமான வசனங்களோடும், சில இடங்களில் அன்றாட, அசுவாரசியமான வசனங்களோடும் நகர்கிறது. கதையின் ஆரம்பத்தில் தீவிரமான பாலியல் சார்ந்த உரையாடல்களை வைத்துவிட்டு, மையப்பகுதியில் அன்றாட வாழ்வின் பிரச்சினைகளைக் குறித்துப் பேசும் உத்தியையும் இன்னொரு இடத்தில் கதைசொல்லியே விளக்குகிறார்:
“நமது உரையாடலில் பொதுவாகக் காணப்படும் ஊளைச்சதையை நீக்கி சொற்களும், வாக்கியங்களும் அவற்றின் ஆதாரப் பொருளின் கட்டமைப்புக்கு ஏற்ற அழகோடு துலங்க வேண்டும் என்று கருதினேன். இந்தக் கதையைப் படிப்பது ஒரு நிர்வாண ஓவியத்தின் முன் நிற்பது போன்ற அதிர்ச்சியைத் தரவேண்டும். அதிர்ச்சி தரும் முதல் கணங்களைக் கடந்து மெல்ல மெல்ல பாலுணர்வுக்கு அப்பாலான அகசலனத்தையும் நிறைவையும், இந்த மொழிநடையின் மூலம் சாதிக்க விரும்பினேன்.”
          எழுதப்படும் விதம் குறித்து நமக்குச் சொல்லிக் கொடுப்பவை 
ரமாவும், உமாவும் நாவலில் கதைசொல்லி, “இது சுமாரானவைகளின் காலகட்டம். இதில் சுமாரான கதைதான் எழுதமுடியும்” என்று சொல்வதை ஒத்துக்கொள்ளவேண்டும் என முதல் பார்வைக்குத் தோன்றினாலும், (குறிப்பாக திலீப்குமாரின் கடவு சிறுகதைத் தொகுதியை ஒப்பிடும்போது), இதில் கதைசொல்லி கதை உருவாகும், எழுதப்படும் விதம் குறித்து நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பவை ஏராளம். அவற்றைத் தவறவிட்டால் கதைசொல்லி எழுந்துபோவதைப் போல், திலீப்குமாரும் புன்னகையோடு எழுந்து சென்றுவிடுவார், அவ்வளவே.
        [விஷய முக்கியத்துவத்திற்காக பத்தித் தலைப்பு மட்டும் என்னுடையது]

Monday 18 July 2016

இலக்கியமும் தத்துவமும்

 [திலீப்குமாரின் படைப்புப் பின்னணியிலூடே தவிர்க்க இயலாதவாறு ஒரு  தத்துவப் பார்வை இருந்து வரும். இலக்கியமும் தத்துவமும் எதிரெதிர்க் கோணங்கள் என்ற கருத்து இருந்துவந்தாலும் இரண்டுமே ஒன்றை ஒன்று பாதிப்பதும் ஒன்றின் பாதிப்பு  மற்றொன்றின் இருந்துவருவதும் உலக இலக்கியத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் நடை முறை தான். ஹோமரின் இலியது , மகாபாரதம், தமிழின் சிலப்பதிகாரம், மணிமேகலை, என்று ஒரு பட்டியலே கொடுக்கலாம். ஆழ்ந்த வாசகப் போக்கின் படி அணுகிப் பார்த்தால், தத்துவம் இல்லாமல் இலக்கியம் இல்லை. இலக்கியம் எடுத்து நிறுத்தினால் ஒழிய தத்துவத்திற்கே உயிரோட்டம் இல்லை என்று ஒரு முடிவுக்கு வரலாம்.. குறிப்பாக மௌனியைப் பற்றிய ஆய்வில் தெளிவாகப் புலப்படும். எல்லாத் தத்துவங்களையும் புறக்கணிக்கிற தத்துவம் கூட  ஒரு தத்துவமாகிவிடுகிறது.]
   வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தத்துவம் உதவுவதைப் போன்றே இலக்கியமும் இன்னொரு கோணத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. தத்துவத்திற்கான இறுக்கம் இலக்கியத்திற்குக் கிடையாது என்பதைப் போன்றே தத்துவத்தில் காணப்படும் தர்க்க ஒழுங்கும் இலக்கியத்தில் காணக்கிடைப்பதில்லை.  இன்னும் சொல்லப்போனால், இலக்கியம் தத்துவம் இரண்டுமே முழுமையற்றதான அரூவமான இரு உலகஙகள். ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த இரு உலகங்களும் வாழ்க்கையை விளக்கிக் கொள்ளவும், வெற்றி காணவும் யத்தனித்துக்கொண்டே இருக்கின்றன.  ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை இந்த உலகங்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.

கிரியா பதிப்பகத் தோழர்களுடன்  திலீப்குமார் [வலப்புறம் க்ரியா ராமகிருஷ்ணன்]1982

தத்துவத்தைப் போன்றே இலக்கியமும் சிந்தனையைச் சார்ந்த செயல்பாடு, அதன் விளைவாக சுமூகப் பரிமாணம் உண்டு.  மற்றவற்றை விட இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் உள்ள சமூகப் பரிமாணம் அதிகமானது.  மேலும், தத்துவத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவு பல தளங்களில் நிகழக்கூடியதுதான்.  எனவே மௌனியின் எழுத்துக்களில் சமூகப் பார்வையில்லை என்பதைவிட, மௌனியின் எழுத்துக்கள் சமூகத்தோடு கொள்ளும் உறவு ஒரு குறிப்பிட்ட தளத்தில் நிகழ்ந்தது, நிகழ்கிறது என்பதே உண்மை.  புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சமூகத்தோடு  கொள்ளும் உறவு வெளிப்படையான யதார்த்த தளத்தில் நிகழ்வதை நாம் பார்க்கலாம்.  மௌனியின் எழுத்துக்கள் உள்ளார்ந்த மனம் சார்ந்த ஒரு தளத்தில் இயங்குகின்றன.  புதுமைப்பித்தன் தன் எழுத்துக்களின் மூலம் சமூகத்தோடு கொள்கிற உறவு முழுமையானது  அல்ல என்று கூட ஒரு மார்க்ஸியவாதி கருதக்கூடும்.  ஒரு வாசகருக்கும் அவ்வகை எண்ணங்கள் ஏற்படலாம். அதேபோல், மௌனி தன் எழுத்துக்கள் மூலம் கொண்டிருந்த சமூக உறவு முழுமையானதா அல்லவா என்று பரிசீலிக்கப்பட வேண்டும்.  குறிப்பாக மார்க்ஸீயவாதிகள் அவர் சமூகப் பார்வையற்றவர் என்று ஒரேடியாக அவரைப் பகிஷ்கரித்துள்ளனர்.
நண்பர் சீனிவாசனுடன் 1989ல் 

                                                     
மௌனிக்கு இலக்கியத்தில் போன்று தத்துவத்திலும் நல்ல புலமை இருந்தது. அவரது தத்துவப் பரிச்சயம் அவரது கலை இயல்புக்கு வெகுவாக உதவியது என்றாலும் தத்துவத்தின் செல்வாக்கு அவர்மீது துல்லியமாக ஒரு குறிப்பிட்ட போக்கின் அடிப்படையில் லட்சியம் கொள்ளும்படியாக இருந்ததில்லை.  மௌனிக்கு  அத்வைத்தில் ஈடுபாடு இருந்தது என்று கூறப்படுகிறது.  இதை ஊர்ஜிதம் செய்யும் பல வாசங்களை நாம் அவரது கதைகளில் காண முடியும். [மீண்டும் பழைய பதிவு ஒன்றைத் திருப்பி நினைவுறுத்துவது மௌனி போன்றே தி.குவும் தத்துவ தரிசனத்தில் இருந்து முற்றாக விடுபடுவர் அல்ல என்று காணவே]சமீபத்தில் ஒரு அமெரிக்க ஆய்வாளர் மௌனியை ஒரு எக்ஸிஸ்டன்ஷியலிஸவாதி என்று கூறியிருக்கிறார்.  இதையும் ஊர்ஜிதம் செய்யும் பல வாசகங்களை மௌனியிடம் நாம் எளிதாகக் காணமுடியும்.  மௌனியை இவ்வாறு வகைப்படுத்துவது அவரைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக அவரிடமிருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மௌனி கதைகளில் காணப்படும் தத்துவச்சாயல் கொண்ட வாசங்கள் ஒரு பிரக்ஞை பூர்வமான திட்டமிடுதலின் விளைவுகள் அல்ல.  அனுபவங்களின் வெளிப்பாட்டின்போது தெறித்து விழும் பார்வைத்துணுக்குகளவை உணர்வுகளின் உத்வேகத்தில் வெளிப்படும் இவற்றை எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவப்போக்கிலும் ஐக்கியம் கொள்ளவைக்க முடியாது.  மௌனியின் தத்துவப் பூச்சுள்ள வார்த்தைகள் பன்முகம் கொண்டவை.  இவற்றில் முழுமை காண முயல்பது அவ்வளவு சரியாக இராது.  மௌனி தத்துவ விசாரங்களைப் பகிர்ந்து கொள்ள இலக்கியத்தைப் பயன்படுத்தவில்லை.  எந்த வகையான தத்துவமும் வாழ்க்கையை வகைப்படுததுவதிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் காண்கிறார்.  தத்துவத்தின் நோக்கம் மௌனியிடம் இல்லை.  வாழ்க்கைக்குத் தத்துவம் தரும் நிம்மதியுணர்வை அவர் தன் கதைகளின் மூலம் முறியடிக்க நினைத்தார்.  தவிர, அவரது கதைகளில் காணப்படும் இந்த அம்சங்கள் ஒரு கலைப்படைப்புக்கான தேவையின் அடிப்படையில் எழுந்தவை.  தம் சிறுகதைகளின் வடிவத்தில் அவர் கொண்டிருந்த பிரக்ஞையும் கண்ட வெற்றியும் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. மௌனி முதன்மையாக ஒரு கலைஞர்.
  மேலும் மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது ஒன்றை நாம் அவரது எல்லாக் கதைகளிலும் காணமுடியும்.  மௌனியின் கதை மாந்தர்கள் அனைவரும் எப்போதும் ஒர தீவிரமான பிரக்ஞை நிலையில் சஞ்சரிப்பவர்களாவே இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதமும் தீவிரமான பிரக்ஞை நிலையில் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பிற்றிச் சிந்திக்கவும் பேசவும் தலைப்பட்டு விடுகிறான். அவனுக்குத் தத்துவப்பரிச்சயமோ படிப்போ இல்லாத போதும்கூட, மரணம், காதல், போன்ற போன்ற உளவியல் விளைவுகள், பரிமாணங்கள் மிகுந்த அனுபவங்களில் மனிதன் ஆழ்ந்து தீவிரமான பிரக்ஞை கொள்ளும் போது அந்நிலை அவன் பேச்சையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது. மௌனியின்  நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது.  மௌனியின் பாத்திரங்கள் இவ்வகை அனுபவங்களைக் கொண்டவர்களாகவும், இத்தகைய பாதிப்பை ஏற்றவர்களாகவும் உள்ளார்கள்.  ஏற்கெனவே கூறியது போல மௌனி கதைகளின் முக்கிய அனுபவங்களும் உறவியல் பரிமாணங்கள் மிகுந்த மரணம், ஆண், பெண் உறவு. வாழ்வின் நிச்சயமின்மை போன்றவையே.  மௌனிக்கு மனித அனுபவங்களின் புறவிளைவுகளில் அதிக ஈடுபாடு  இருந்ததில்லை.  ஒரு அனுபவம் மனிதனிடம் ஏற்படுத்தும் உளவியல் விளைவுகளிலேயே அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.  இதன் தொடர்ச்சியாகப் பல சமயம் அவரது பாத்திரங்களின் அனுபவங்கள், அதற்கு அவை காட்டும் எதிர்வினைகள் ஆகியவை விசித்திரமாகத் தோற்றம் தரக் கூடியவை. ”எங்கிருநதோ வந்தான்” என்ற அவர் கதையில் காணப்படும் பின்வரும் வரிகள்.
“.... நடுஇரவில் நான் விழித்துக்கொண்டேன். ஒருக்கால் நான் தூங்காமலேயே படுத்திருந்தேனோ என்னவா? பக்கத்து அறையிலிருந்து, கேட்டதும் கேட்காததுமாக, அடித்தொண்டையிலிருந்து அவன் பாடிக் கொண்டிருந்தான்.... பாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது. அது மறைந்த இடத்திற்கு என்னை இழுத்துச் சென்றது போலும்... என்னையே, என்னுடைய சவத்தையே நான் வெகுதூரத்திற்கப்பால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நானே உணர்ந்த என் இறப்பு, வருத்தம், ஆத்திரம், ஒரு அருவருப்பு, ஒருங்கு கூடின... ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது... மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இறப்பு...? இறப்பு?... அடைய ஆவல் கொண்டு ஒரு ஸ்வரத்தை எட்டி எட்டி பிடிக்க மேலிருந்தும் கீழிருந்தும் முயலும் அவன் பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சோகமான கீதம் அவன் பாடிக்கொண்டிருந்தான்.  என் உணர்வை உயர்த்தி, கனவிற்கும் நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக்கோட்டைத் துடைக்கவல்ல அவனது கானம் சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக கோடிட்டதுதானா நம் வாழ்க்கை...? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லைக் கடக்க அறியாது கடந்தது போம். கனவின் கரையைத் தாண்டி அவன் பாடிக்கொண்டிருப்பதைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன் போலும் நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்றால் எப்போது நான் விழிப்படைந்தேன்?”
  மௌனி, மனித அனுபவங்களை, அநேகமாகத் தன் எல்லாக் கதைகளிலும் உள்ளார்ந்த மனமும் அறிவும் மட்டுமே சார்ந்த உளவியல் தளத்தில் நிகழ்த்திக்காட்டுகிறார். யதார்த்த உலகின் அம்சங்கள் அவரது கதைகளில் படிமப் பிரமாணம் கொள்ளும் போது மட்டும் அற்புதமாகப் பிரகாசிப்பதையும், மற்ற சமயங்களில்  மங்கலாகிப் போவதையும் காணலாம்.  இவ்வகையில் வாழ்க்கை அனுபவங்களின்  உளவியல் பரிமாணங்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆழமாக அலசிப் பார்க்கும் போது மௌனி அனுபவங்களின்  புறத்தோற்றத்தின் இறுதிய தன்மையைத் தகர்த்து விடுகிறார்.  தவிர, தன் தனித்துவமான பார்வைகளை வழங்கி அந்த அனுபவங்களைப் புதிய ஒளியில் காட்டி வாசகனைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறார்.
[திலீப்குமார் படைத்துள்ள  கதைகளில் காமம் ,மரணம் ஆகிய இருவகைத்  தாக்கங்களில் மனித வாழ்வில் ஊடாடும் ஆன்ம அனுபவங்கள் தத்துவக் காற்று வீச்சில் அல்லாடுவது புலப்படும் ]


Sunday 17 July 2016

உரைநடையில் பரிசோதனை முயற்சிகள்

[தமிழில் உரைநடை அடிக்கடி மாறுதலுக்கு ஆட்பட்டிருப்பதை எல்லாரும் அறிவர். இது சங்க காலத்திலிருந்து [அப்படி ஒன்று அக்காலத்தில் கிடையாது என்று வாதிக்கும் அறிஞர்கள் தொல்காப்பியத்திலேயேவும் , அதற்கு உரை எழுதிய பல புலவர் பெருமக்களிடையேயும் , சான்றுகள் காணலாம்.] வள்ளலார், மகாகவி பாரதி , அண்ணாதுரை, கருணாநிதி ,ஜெயகாந்தன் ஆகியோர் உரைநடையில் பல பரிசோதனை முயற்சிகள் செய்துள்ளதும் அனைவரும் அறிந்த செய்தி தான். 
ஆனால் 1980களின் பிற்பகுதியில் உணர்வுபூர்வமாக, அதாவது  அறிந்து உணர்ந்தே செய்யப்பட்ட உரைநடையில் பரிசோதனை முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்மொழியின் வாக்கிய அமைப்பு, சொற்பிரயோகங்கள், ஒலிக்குறிகள் கொண்டு உணர்வுகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் முறை, சுருங்கச் சொல்லும் உத்தி   எனப் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஜனரஞ்சக ரீதியாக சுஜாதா இதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளதை தமிழ் உரைநடை வளர்ச்சி பால் கண்ணோட்டம் செலுத்தி வருவோர் மறுக்க இயலாது. அப்படி சுஜாதா என்ன சாதித்தார் என்பதை விளக்குவது தற்சமயம், திலீப்குமார் பற்றிய முழுக்கண்ணோட்டம் தரும் தற்போதைய முயற்சிக்குப் பொருந்தாது.



சுஜாதா

திலீப்குமார் வெறும் படைப்பாளியாக மட்டும் இருந்திருந்தால் உரைநடையில் பரிசோதனை முயற்சிகள் அதைக்கண்டு கொள்ளாமல், பொருட்படுத்தாமல் போயிருக்கக் கூடும். அவ்வப்போது தமிழ் மொழியில் உரைநடை பூர்வமாக நடைபெற்று வரும்  மாற்றங்களை கூர்ந்து கவனித்துப் பதிவு செய்பவராகவும் இருந்திருக்கிறார் என்பது பின் வரும் அவரது கட்டுரையில் வெளிப்படும் ]
ண்பதுகளின் பிற்பகுதியில், தமிழில் முயற்சி செய்யப்பட்ட Non – linear எழுத்துக்களின் சந்தர்ப்பத்தில் உரை நடையில் பரிசோதனை முயற்சிகள் பற்றி சிந்திப்பது சற்று பொருத்தமான விஷயம்தான். எதார்த்தவாத இலக்கியத்தின் பல அம்சங்களை துறந்துவிட்டதான ஓர் எண்ணம் மேற்குறித்த Non-linear முயற்சிகளை படிக்கும் போது நமக்கு கிட்டும். இந்தக்  கதைகள் தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய விளைவுகளை பற்றி அக்கறைக் கொள்ளும் முன் பரிசோதனை முயற்சிகளின் ஆதார பின்னணி பற்றியும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.
உலக அரங்கில், பரிசோதனை முயற்சிகளுக்கு, கவிதைக்கு நிகரான விரிந்த தளமாக உரை நடையும் கடந்த 40,50 ஆண்டுகளில் வளர்ச்சியுற்று வந்துள்ளது. இது சாத்தியமாவதற்குரிய ஒரு அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடி, நம் சமகால வாழ்க்கையில், முன்னெப் போதையும் விடவும் கூர்மையாக, தோன்றியுள்ளது. 2வது உலக போருக்கு பின்பான உரைநடை இலக்கியத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சிகள் இக்கருத்தையே ஊர்ஜிதம் செய்கின்றன.
2வது உலகப் போருக்கு பின்பான உடனடியான எழுத்துக்களில் மனித நேயம் வலியுறுத்தப்பட்டது என்றால், இன்று வாழ்க்கையின் நிச்சயமின்மை, இறுக்கம் வன்முறை மரணம் ஆகிய அம்சங்களே பெரும்பாலான இலக்கியங்களின் விஷயங்களாக உள்ளன.
கலை படைப்புகளில் வடிவ, உள்ளடக்க ரீதியான பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்வது என்பது மிகவும் இயல்பான ஓர் அம்சம்.  இந்த நூற்றாண்டில், நுண்கலைகளில் இத்தைய பரிசோதனைகள் ஒரு உச்ச கட்டத்தையே அடைந்தன என்பதை நாம் அறிவோம். தன் அறிவு, முதிர்ச்சி இவற்றின் துணைகொண்டு, வாழ்க்கையை ஒரு எழுத்தாளன் எந்த தளத்தில் எதிர் கொள்ள விழைகிறானோ அதற்கேற்ற ஒரு புதிய இலக்கிய உருவை அவன் கைக்  கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மேலும் பரிசோதனை முயற்சிகளுக்கான தர்க்க ரீதியான நியாயம் எழுத்தாளனின் ஆற்றலை, ஆர்வத்தை மட்டுமல்லாமல் பிரச்சினைகளின் கடுமையையும் பெரிதும் சார்ந்துள்ளது. ஒரு பரிசோதனை முயற்சியின் வெற்றி தோல்வியையும்  கூ ட  அந்த அம்சங்களே நிர்ணயிக்கின்றன.
ஒரு புதிய இலக்கிய முயற்சியில் , சம்பிரதாயமான யதார்த்த இலக்கிய வடிவம் நிராகரிக்கப்படும்போது அது புதியதொரு இலக்கிய சாத்தியப்பாட்டை முன் வைக்கிறது என்பதை விடவும். நம் சமகால வாழ்க்கையைப் பற்றிய ஓர் உண்மையை புதிய கோணத்தில் விவாதிக்கிறது என்பதே முக்கியம். வாழ்க்கை அதன் மென்மையை இழக்கும்போது, இலக்கியமும் தன் சம்பிரதாயமான அழகையும் ருசிகரமான அம்சங்களையும் இழக்கத்தான் வேண்டும். இலக்கிய அனுபவம், இலக்கிய விமரிசனத்திற்கான அடிப்படைகள் வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், இலக்கிய ரீதியான பரிசோதனை முயற்சிகள் வாசகனை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும். எனினும், இலக்கியம் குறித்த இந்த புதிய விழிப்புணர்வின் நோக்கம், நிச்சயம் வாசகனை பரிகசிப்பது அல்ல என்று நான் நினைக்கிறேன்.
50 ஆண்டுகளுக்கு முன்பான பரிசோதனை முயற்சிகளில், அவை எழுப்பிய கேள்விகளையும் மீறி அவை பிரதிபலித்த கலக – உணர்வுகளையும் மீறி, அவற்றிற்கென்றொரு விமர்சன இலக்கும், வாழ்க்கையின் ஆதர்சங்கள் குறித்த ஒரு நப்பாசையும் இருந்தன. ஆனால், இன்று அதற்கான வாய்ப்புகள் இல்லை. குறிப்பிட்டுச்  சொல்லும்படியான ஒரு விமர்சன இலக்கு அல்ல, பல விமர்சன இலக்குகள் இன்று நம் முன் உள்ளன. பிரச்சினைகளின் பன் முக தோற்றத்தை எதிர் – கொள்ளத்தக்க ஒரு புதிய இலக்கிய பரிசோதனையை கைக்கொள்ள நமது சூழல் நம்மை நிர்ப் பந்திக்கிறது.
அதே சமயம், அடிப்படை மதிப்பீடுகள் என்ற எதுவும் இல்லாத நிலையில் லட்சிய கோட்பாடுகள் என்று எவற்றையும் சார்ந்து கொள்ள முடியாத நிலையில் வாழ்க்கையின் குழப்பங்களிலிருந்து நெருக்கடிகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் ஒரு கருவியாக இந்த இலக்கிய செயல்பாடு அமைந்து விடுகிறது என்பது ஒரு தற்செயலான நிகழ்வு. பரிசோதனை முயற்சிகளின் ஊற்றுக்கண்ணும் இதுதான்.
பரிசோதனை முயற்சிகள் என்று சொல்லும்போது அது பிரதானமாக உருவம் சார்ந்த ஒன்று என்ற அடிப்படையிலேயே நாம் இனங்கண்டு கொள்கிறோம். இது ஓரளவுதான் சரி என்று தோன்றுகிறது. எதார்த்த வடிவத்திலேயே, இதுவரை நாம் உணரத்தவறிய பல விஷயங்கள் பல எழுத்தாளர்கள் நமக்கு அளித்துள்ளார்கள். 
ஒரு சம்பிரதாயமான எதார்த்தப் படைப்பில் அதன் உருவப்பழைமையையும் மீறி நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய பல விஷயங்களைப் பார்க்கமுடியும், அதைப் போலவே உருவப் புதுமைமிக்க படைப்புகளிலும் பல அடிப்படைத் தவறுகள் இருப்பதையும் நம்மால் உணர முடியும். உருவப் புதுமை மட்டுமே அதன் தரத்துக்கு உத்தரவாதமாகாது. ஜேம்ஸ் ஜாய்ஸை முன்னிட்டு டாஸ்டாவ்ஸ்கியை நாம் புறக்கணித்து விட முடியாது 
                                                                                                 
ஜேம்ஸ் ஜாய்ஸ் 

.மேலும், கலைப் படைப்புகளில் உருவப் புதுமைகள் தோற்றங்கொள்ள ஒரு சமூகத்தின் கலாசார, சமூ அரசியல் பின்னணி, பல்வேறு கலைமுயற்சிகளின் பரிச்சயம் ஆகியவை சமமான முக்கியத்துவம் உள்ள காரணங்களாக உள்ளன. எதார்த்த வடிவத்தின் போதாமையைப் போலவே, பரிசோதனை முயற்சிகளின் உணர்ந்து சாத்தியக் கூறுகளின் எல்லைகளையும் நாம் உணர்ந்து செயல்படவேண்டும். விமர்சன விவாதங்களின் போது உருவம் உள்ளடக்கம் போன்ற பிரிவுகள் பத்தாம் பசலித்தனமாகத் தோன்றலாம். ஆனால் ஒரு படைப்பாளியின் மனதில் படைப்பு உருக்கொள்ளும் மனநிலையில் இவை முக்கியமான அம்சங்களாகவே இன்னும் உள்ளன.

                                                                                   
டாஸ்டாவ்ஸ்கி
ஒரு படைப்பாளியைப் பொறுத்தவரை Linear, Non-Linear போன்ற அம்சங்களுக்கிடையே பெரிய அளவில், பாரதூரமான வேறுபாடுகள் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த இரண்டுமே பிரக்ஞை பூர்வமான செயல்பாடுகளின் விளைவுகள் தாம். ஒன்று மற்றதை விட சிறந்தது என்று கூறுவதற்கான அடிப்படைகளில் படைப்பு ரீதியான தர்க்கத்தில் தான் வேறுபாடுகள் உள்ளன. இந்தப் படைப்பு ரீதியான தர்க்கம் கூட படைப்பாளிக்கு படைப்பாளி, சூழலுக்கு சூழல் மாறுவதோடு குறிப்பிட்ட படைப்பாளியின் பக்குவத்தையும், அறிவு முதிர்ச்சியையும் பெரிதும் சார்ந்துள்ளது.
ஒரு நுட்பமான வாசகனைப் பொறுத்தவரை ஒரு கலைப் படைப்பு ஒரு முக்கியமான தயாரிப்பு (Product) என்ற அர்த்தத்தில் என்றுமே அனுபவமாவதில்லை. அது செயல்பாட்டின் தொடர்ச்சி நிலையாகவே (Process) அனுபவமாகிறது. அதாவது, ஒரு படைப்பு, எழுத்தாளன் முன்வைக்கும் வடிவத்திற்கு சம்பந்தமில்லாத வகையிலான உரைநடையின் பலி்வேறு பகுதிகளாக, வர்ணனைகளின் துணுக்குகளாக ஒரு கலவையான வடிவத்திலேயே அனுபவமாகிறது. இந்த உண்மையை கணக்கில் கொண்டால் படைப்பின் உருவம் என்பதற்கு அளிக்கப்படும் அதீத முக்கியத்துவம் பொருளற்றதாகத் தோன்றும். கட்டவிழ்ப்பு முறை விமர்சனம் போன்ற ஒரு செயல்பாடு வாசக அனுபவத்தில் (கட்டவிழ்பு முறை விமர்சனத்தின் தர்க்க ஒழுங்குகள் இதில் காணப்படாவிட்டாலும்) நிகழ்கிறது. இதுவே அரசியல் சமூக இலக்கியம் குறித்த புதிய விழிப்புணர்வு கலைகளில் பிரதிபலிக்கப்படும் போது அவற்றை எளிதாக ஏற்றுக் கொள்ள வாசகனுக்கு உதவுகிறது.
                                                                   ஆதிக்கத்திற்கான உறவுகள் 
தற்போதைய பரிசோதனை முயற்சிகளில் ஏறக்குறைய எல்லாமே, எல்லா உறவுகளும் அடிப்படையில் ஆதிக்கத்திற்கான உறவுகள் என்ற உண்மையிலிருந்தே உந்துதல் பெற்றுள்ளன என்று சொல்லலாம். எல்லா உறவுகளும் ஆதிக்க உறவுகள் என்று சொன்னாலும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த உறவுகளின் ஆதிக்கத்தின் தீவிரத்திலும் கடுமையிலும் அந்த நாட்டின் கலாச்சார, சமூக பொருளாதாரச் சூழலுக்கேற்ப வித்தியாசங்கள் உள்ளன. இந்த அடிப்படைகளை ஒட்டியே தமது இலக்கிய முயற்சிகளும் பரிசோதனை முயற்சிகளும் அமைய வேண்டும் என்று கருதுகிறேன். உதாரணமாக ஒரு அமெரிக்க எழுத்தாளர் தனது சூழலின் கலாசார சீரழிவையும் வன்முறையையும், பாலுறவு சார்ந்த பிரச்சனைகளையும் பிரதிபலிக்க தேர்ந்தெடுக்கும் வடிவப் பரிசோதனைகளிலிருந்து உந்துதல் பெற்று அவற்றை அப்படியே பிரதியெடுப்பது வெற்றியளிக்காது. 
தவிர, பரிசோதனை முயற்சிகளின் நோக்கமே அது நிகழ்த்தப்படும் களத்தில் சில குறி்பபிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதுதான். எனவே, எந்தப் பரிசோதனை முயற்சியும் அது நிகழ்த்தப்படும் சூழலின் தன்மைகளிலிருந்து அந்நியப்பட்டுவிடாமல் பிணைந்தே இருக்க வேண்டும். பரிசோதனை முயற்சிகளில் முதன்மையாக தனிமனிதப் பிரச்சனைகள் மற்றும் தனித்துவம் மிகுந்த கோணத்திலான உள்நோக்கிய பார்வைகளே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. இத்தகைய படைப்புகளில் எதார்த்த வடிவ இலக்கியத்திற்குரிய இலக்கணம் புறக்கணிக்கப்படுகிறது. 
இந்தப் புறக்கணிப்பு இரண்டு காரணங்களின் அடிப்படையில் நிகழ்கிறது. ஒன்று அமைப்புகளின் சீர்குலைவுக்கு எதிரான மற்றும் அந்த சீர்குலைவை எதிர்கொள்வதற்குரிய ஒரு குரலாக அந்த சீர்குலைவை எதிர்கொள்வதற்குரிய ஒரு குரலாக அது செயல்படும் என்பது. பரிசோதனை முயற்சிகளுக்கு எதார்த்த ரீதியான படைப்புகளுக்குரிய வடிவ ஒழுங்கு தேவையில்லை என்ற உண்மையோடு, பரிசோதனை முயற்சிகள் எழுத்தாளனுக்கு எல்லையற்ற சுதந்திரத்தை வழங்குகிறது என்பதையும் இணைத்துப் பார்த்தால் ஒன்றிலிருந்து மற்றதற்கு தாவிவிடுவது எளிதல்ல என்பது புலப்படும்.
                                                                                     கோணங்கி
கடந்த இரண்டு மூன்று வருடங்களில், தமிழில் சில்வியா, சாரு நிவேதிதா, கோணங்கி, அம்பை , கோபி கிருஷ்ணன் ஆகியோர் பல பரிசோதனை முயற்சிகளை சிறப்பாக செய்து பார்த்திருக்கிறார்கள் என்பது உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. என்றாலும் இம்முயற்சிகள் தொடர்பாக எழுந்துள்ள சாதக பாதகமான விமர்சனங்களில் காணப்படும் ஆவேசத்தை நியாயப்படுத்தும் வகையில் இப்படைப்புகள் இருக்கின்றனவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அம்பை 
கோபி கிருஷ்ணன்
                                                                                          
சாரு நிவேதிதா



சொற்களை விட மௌனம் மிகவும் முக்கியமானது

பேட்டி தொடர்கிறது
வி. பா:  உங்கள் படைப்புகளில் அடிக்கடி எதிர்ப்படும் ''தீம்''களில் ஒன்றான வறுமை' யை அது நினைவூட்டுகிறது .நீங்கள் வறுமையின் பல்வேறு கோணங்களைக் கோடிட்டுக் காட்டினாலும்  ஜான் ஆஸ் போர்ன்  தன் ''லுக் பேக் இன் ஆங்கரி'ல் செய்வது போல அதை வைத்து போலி உணர்ச்சி உருக்கமோ,  பணக்காரர்களை கடுமையாகக் கண்டிப்பதோ கிடையாது.இல்லை. அதற்கு என்ன காரணம்?
                                                       
ஜான் ஆஸ் போர்ன் 
தி.கு என் இளமைக்கால அனுபவங்கள் எல்லாமே சாதாரண மக்களோடு தான் நிகழ்ந்தன.எனக்கு எந்த ஒரு வயதுவந்த வெற்றியாளரின் ரோல் மாடலும் கிட்டவில்லை. அந்த சாதாரண மனிதர்களின் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்கும் நான் சாட்சியாக இருந்தேன், எதிர்பாராத தருணங்களில் வயது வந்தோர் நொறுங்கி விடுவதை நான் கண்டிருக்கிறேன். மனித ஆளுமைகளின் பல்வேறு வகை கோணங்களையும் நான் கண்டு உணர நேர்ந்தது . எனது இயல்பான நகைச்சுவை உணர்வு , அவற்றைக் குத்தலாகவோ ஏளனமாகவோ நோக்கவிடாமல் தவிர்த்தது . ஆனால் வறுமையை  ஒருபோதும் ஒரு காட்சிப் பொருளாக வைக்கக்கூடாது என்ற திட உணர்வைக் கொடுத்தது.
                                                               
''லுக் பேக் இன் ஆங்கர்" 

வி. பா: உங்கள் படைப்புக்களில் மற்றொரு முக்கியமாகக் காணப்படும் தீம் மரணம். அத்தகைய படைப்புக்களில் கூட விலகி நின்று பார்க்கும் கோணமே வெளிப்படுகிறது. எந்த வித இஸங்களில் இருந்தும் நீங்கள் விலகி நின்றாலும் நிஹிலிசத்தோடு தொடர்பற்ற எக்சிஸ்டென்ஷியல்  போக்கு மிக ஆழமாகத் தென்படுகிறது. உங்கள்  சிறுகதைத் தொகுதியின்  தலைமைப் படைப்பான ''கடவு '' மரண எதிர்பார்ப்புத்த தருணத்தை மரணத்திடமிருந்தே பிரித்துக் காட்டுகிறது.அந்தக் கதை எனக்கு ஹைடிக்கரின் மரணத்திற்கு முந்திய தருணம்[ ‘Moment before Death.’] என்ற கருத்தியலை நினைவூட்டியது. :

தி.கு : அது வேண்டுமென்றே எந்த குறிப்பிட்ட தத்துவத்தைப் பின்பற்றிச் செல்லும் உத்தேசத்தினால் அல்ல.கடவு கதை  என் பாட்டியின் மரணத்தைப் பின்னணியாகக் கொண்டது. தனது மரணத்தை உணர்ந்த அவர் உயிர் விடுவதற்கான ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். எனினும் ஒரு படைப்பாளி ஓர் உண்மை வாழ்க்கை அனுபவத்தை கதைவடிவமாக்க அதை மாற்றியமைக்கவும்  கூடுதல் விவரம் சேர்க்கவும் வேண்டி வருகிறது. மேலும் மரணம் என்பதை நான் வாழ்வின் ஓர் முக்கிய அம்சமாகக் காண்கிறேன். அதுவே இறுதி என்று காட்ட முயலவில்லை. மரணத்திற்கு ஒரு மிகைப்படுத்தப்பட்ட முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன். எனவே அந்த அளவில் அதை ''அண்டர்பிளே'' செய்கிறேன்
                                                           
கடவு நூல் மேலட்டை 

வி. பா: : உங்கள், “கடிதம் ” கதையில் ஓ'ஹென்றியின் அதிசய  உத்தியைக் கையாண்டு மரணத்திற்கு அஞ்சிக்கொண்டே இருப்பவன் நெடுநாள் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்; அவனது புலம்பலைக் கேட்டுக்கொண்டே இருப்பவன்  திடீரென்று செத்துப் போகிறான்.  அதே அதிசய  உத்தி தான். சரிதானா?
தி.கு : ஆமாம். ஜனம் கதையில் சுயநினைவின்றி விழுந்திருக்கும் ஒருவனைச்செத்துவிட்டான் என்று நினைத்து  வெளிப்படும் மக்களின் அறிவீனத்தைக் காட்ட முயன்றிருக்கிறேன். மனம் எனும் தோணி பற்றி கதையில் மக்கள் எவ்வாறு மரணத்துக்கு அருகாமையிலான அனுபவத்தைத் தவிர்க்கிறார்கள்  தடம் கதையில் போலீஸ்  கஸ்டடியில் இருந்து விடுதலை பெற மரணத்தை ஒரு கருவியாகக் காட்டியிருக்கிறேன் .
வி. பா:  அந்தக் கதை உடல் பாதைகளில் இருந்து ஒரு உடனடி நிவாரணம் வழங்குகிறதே தவிர அங்கே எதிர்ப்பே இல்லை. மிகவும் கீழ்ப்படிதலான  ஏற்பே உள்ளது.
தி.கு :  போலீஸ்  கஸ்டடியில் இருக்கும்போது எப்படி ஒருவர் எதிர்ப்புத் தெரிவிக்க முடியும்?அந்தக் கதை  1980களின் முற்பாதியில்  அடிக்கடி நேரிட்ட என்கவுண்டர் கொலைகள் பற்றியது.  அதுதான் யதார்த்தமும் கூட .சாட்சியம் இல்லாத வன்முறை நிகழும்போது பாதிக்கபடுபவர்  பணிந்து ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை.  ஆனால் அவனைத் துன்புறு வத்துகிறவருக்கு  வேறுவிதமான  பாதிப்புகள் உண்டு. காரணம் அவர் தான்  நடக்கிற வன்முறையின்  ஒரே சாட்சி. ஆகவே அது  உள்ளுணர்வுகளுக்கு ஒரு தூண்டுவதாகவும் பின்னால் வன்முறை என்ற செயலின்  வியர்த்தத்தைப்புரிய வைக்கவும் உதவக்கூடும் .மேலும் தன்னை அதிலிருந்து விலக்கிவைப்பதன் ,மூலம் ஒருவன் தன்  ஆன்ம கௌரவத்தின் ஒரு கூறினைக்  காப்பாற்றிக் கொள்ள முடியும்.
வி. பா:  ஆனால், விலகிநிற்றல் என்பது ஒரு வகை பற்றின்மை அல்லவா? நான் இதைக் கேட்பதற்கு ஒரு காரணம் உண்டு. உங்கள் படைப்புக்களில் செக்ஸ், மரணம், என்ற இரு அம்சங்களில் இந்த பற்றின்மை  அதிகம் தலை காட்டுகிறது . உடல் பூர்வமான நெருக்கம் இருக்கிறது. ஆனால் அது நம்பிக்கையை நோக்கி இட்டுச் செல்வதில்லை. உங்கள்   “ நிகழ மறுத்த அற்புதம்”  என்ற கதைகளை வைத்துக்கூறுகிறேன்
தி.கு :  நான் .லட்சியபூர்வமான அல்லது ரொமாண்டிக்கான   காதல் அனுபவத்திற்கு ஆட்பட்டதில்லை; காதல் சூழ்நிலையோடு சம்பந்தப்பட்டது. அது  எப்போதுமே  ஆறுதல் தருவதாக இருந்து விடுவ தில்லை. பெரும்பாலும் அது உடலோடு தொடர்புடையதாகவே இருக்கிறது . என்னைச் சுற்றி உடலின் பௌதீக துர் உபயோகங்களையே நான் காண்கிறேன். உடலின் மீதான நம்பிக்கை தான் சுய-கௌரவத்தை வரையறுக்கிறது. அதனால் தான் அந்த உணர்வை நான் சினிக்கலாக  அணுகுகிறேன்
 வி. பா:இது “நிகழ மறுத்த அதிசயம் ”கதையில் வருவது போல் மௌனத்தையும், சொற்களின் மீதான நம்பிக்கையின்மையையும் காட்டும் போக்கோடு தொடர்புடையதா ?
தி.கு : ஒரு பொதுக் கொள்கையாக  சொற்களை விட மௌனம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.இந்தக் கதையில் மிஸஸ்.ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்துக்கு குரலே கிடையாது என்று காட்டவே நான் விரும்பினேன்

                                                       
சாஹித்ய அகடெமி 1989ல் ஏற்பாடு செய்த மொழிபெயர்ப்புப் பணிமனையில் வல்லிக்கண்ணன் திலகவதி, தம்பி ஸ்ரீனிவாசன்  மற்றும் பிற எழுத்தாளர்களுடன் மூன்றாவது வரிசையில் உயரமாகத் தென்படும் திலீப் குமார் 
வி. பா உங்கள் படைப்புக்களில் காணப்படும் பற்றின்மையை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . படர்க்கை எனப்படும் மூன்றாவது ஆள் பேசுவது போன்ற டெக்னிக் உங்கள் படைப்புக்களில் மேலோங்கி நிற்கிறது.கோயம்பத்தூர் குண்டு வெடிப்புகள்  பற்றிய ஒரு குமாஸ்தாவின் கதை படைப்பில்  முன்னிலை முறை உத்தியை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள். இதைப் பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
தி.கு : அவர்  யாராகவாவது இருக்கலாம். அந்த வன்முறை நிகழ்வுக் காலங்களில் ஒரு தனி நபர் தனது நுண்ணுணர்வுகளில் இருந்து விடுபட்டு அதற்கு அப்பாற்பட்டவராகவே இருக்கிறார். தன் சுயத்துவத்தோடு ஒரு தொடர்பு அற்றுவிடுகிறது. அதைத் தான் ஒரு குமாஸ்தாவின் கதையில் நான் முன்னிறுத்தி இருக்கிறேன்
வி. பா : உங்கள் படைப்புக்களில் குஜராத்திகளுக்கும் தமிழருக்குமான கூட்டு வாழ்வின் சரியான தொடர்பு வெளிப்படுகிறது ஆனால் குஜராத்தி சொற்றொடர்களை தமிழ் வடிவிலும் , மொழிபெயர்த்தும் எழுதுகிற தேவையை  என்னால் அங்கீகரிக்க முடியவில்லை தீர்வு ,ஜனம் ,கடிதம் அக்ராஹாரத்தில் பூனை ஆகிய கதைகளை வைத்துக்கூறுகிறேன்
தி.கு : அது என் படைப்புமொழிக்கும் சொந்த அனுபவ மொழியான குஜராத்திக்கும் இடையிலான தீர்க்க முடியாத போராட்டத்திற்கும் இடையில் நேரும் விளைவு. இரண்டிற்குமே நான் விசுவாசமாக இருக்க நேரிடுகிறது.
வி. பா : உங்கள் வாழ்க்கைப் பார்வை மற்றும் படைப்புக்களுக்கிடையிலான கருத்து மற்றும் வேறுபாடுகளை அற்புதமாக சுட்டிக் காட்டினீர்கள்.எழுத்தாளர் என்ற முறையில் உன்னால் கொள்கை என்ன என்று கேட்டுவிட்டு  பேட்டியை முடிக்க விரும்புகிறேன்..
தி.கு : என் கொள்கை என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கைகள் விரிவாக்கம் தான்.வாழ்க்கை என்பது கறுப்பாகவோ வெள்ளையாகவோ இல்லை. அது முக்கியமாக சாம்பல் நிறத்தில் தான் இருக்கிறது. பெரும்பாலும்  சார்பு நிலையாகக் கொள்ள ,எந்த தத்துவப்போக்கோ அல்லது வேறு எதுவோ  இல்லை. நாம் வெற்றி பெறாதவர்களாக இருந்தபோதிலும் நமக்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும் .எனவே மனித கௌரவத்தையும் மாண்பையும் நாம் தக்க வைத்துக்கொள்வது முக்கியம்.  ஓர் எழுத்தாளன் என்ற முறையில் எனது முதல் பணி என்பது ஒரு நல்ல கதை சொல்வது . என்னைப் பொறுத்தவரை  அதன் விளைவுகளை எப்போதும் நிலைநிறுத்துவது தான்.   என்னைச் சுற்றி உள்ளவர்களிடம் உணர்வுகளை விரிவடையச் செய்வதும் , பரிவும் பச்சாதாபமும் கொள்வதும் எழுத்தாளன் என்ற நிலையில் எனக்குள்ள பொறுப்புணர்வு. அது மிகவும் பெரிய பணி, காரணம் அந்த உணர்வுகள் அதிகரித்த அளவில் அருகிக் கொண்டே வருகின்றன
[இந்தப் பேட்டிக்கு அரும்பத உரை, விளக்க உரை எழுதும் சிரமம் தவிர்க்க விரும்புகிறேன். திலீப் குமார் என்ற இலக்கிய ஆளுமையின் ஓசை செய்யாத உள்ளடக்கத்தை ஓரிரு முறை வாசிப்பது அவசியம்]


Thursday 14 July 2016

திலீப்குமார்-பேட்டி

.
[பொதுவாகவும், சிறப்பாகவும், குறிப்பாகவும்,வெறுப்பாகவும் கறுப்பாகவும், வெள்ளையாகவும், விவரிப்பாகவும்  சொல்லப்போனால் எனக்குப் பேட்டிகள்  பிடிக்காது. கொடுப்பதும் எடுப்பதும் இரண்டுமே!ஆனால்  எனக்கு எது எது பிடிக்காது என்று கண்டுகொண்டு  உலகம் எல்லாவற்றையும் மாற்றி அமைத்துக் கொள்வதில்லை. அது பாட்டுக்கு அது பேட்டித் தொழிலை  பெட்டிக்கடைத் தொழில் போல நடத்திக் கொண்டு தானிருக்கிறது 
பேட்டி பற்றி அசோகமித்திரன் தமக்கே உரிய குத்தூசி நகைச்சுவையோடும் ஒரு  நிதர்சனக்கண்ணோட்ட த்தோடும் கொடுத்த பேட்டி ஒன்று பின்வருமாறு.]

"ஒரு புது மாதப் பத்திரிகைக்காக நண்பர் ஒருவர் என்னைப் பேட்டி கண்டார்.  கேள்விகள் அவருடையது.  பதில்களை எழுதிக் கொடுத்து விட்டேன்.  அச்சில் எப்படி வரப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.
 கடந்த பத்தாண்டுகளாகத்தான் நான் பேட்டி காணக் கூடியவனாக நினைக்கப் பட்டிருக்கிறேன்.  பேட்டி காண வருபவர்கள் ஒருவர் தவறாமல் அவர் காணும் பேட்டி மிகவும் வித்தியாசமானது என்றுதான் சொல்வார். ஆனால் ஒரே மாதிரிக் கேள்விகள்.  அல்லது ஒரே மாதிரிப் பதில்களைப் பெறக்கூடும் கேள்விகள்.
 உண்மையில் இந்தப் பேட்டிகளில் பேட்டி காணப்படுபவரை விட பேட்டி காண்பவரின் நோக்கம்தான் நன்கு வெளிப்படுகிறது.  ஆரம்பத்தில் அச்சில் என்னுடைய பேட்டிகளைக் கண்டு நான் திகைத்துப் போயிருக்கிறேன்.  இப்போது பதில்களை எழுதிக் கொடுத்து விடுவது அதனால்தான்.  இல்லாது போனால் பேட்டி காண்பவர் அவராகவே பதில்களை எழுதிக்கொண்டு விடுவார்.  இதைத் திட்டமிட்டபடி செய்வது உண்டு.  அப்படியொரு திட்டம் இல்லாமல் பேட்டிகள் நிகழ்ந்திருக்கின்றன.  இதெல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியரின் தேர்வு என்று ஒன்றுண்டு.  அவர் வெட்டி விடும்போது எப்படி நான் முக்கியம் என்று நினைத்ததை உணர்ந்து கொண்டு அதை வெட்டிவிடுகிறார் என்றும் ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.
 பேட்டிகளே பத்திரிகைத் தேவைக்காக உருவான ஒரு வடிவம். வள்ளுவரும், வீரமாமுனிவரும் பேட்டி கொடுத்ததாக வரலாறில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பத்திரிகைகளும் மக்களிடையே ஜனநாயகச் சிந்தனைகளும் எழுச்சி பெற ஆரம்பித்ததில் ஒரு பிரச்னை குறித்துக் கேட்டு அதற்கு அந்த அறிஞரின் பதிலைத் தருவதில் பேட்டி வடிவம் ஒரு மாதிரித் தெளிவு பெறத் தொடங்கியது.
 இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் சில அமெரிக்க இளைஞர்கள் ''பாரிஸ் ரிவ்யூ'' என்ற பத்திரிகையைத் தொடங்கினார்கள்.  (கம்ப்யூட்டர்க்காரர்கள் திட்டவட்டமான தகவல்கள் பெறலாம்).  இவர்களுடைய பத்திரிகையில் பிரபல எழுத்தாளர்கள் இடம் பெறவும் வேண்டும், அவர்களுக்குச் சன்மானம் தரும்படியாகவும் இருக்கக் கூடாது.  இதற்கு ஓர் உத்தியாக''பாரிஸ் ரிவ்யூ' பேட்டிகள் தொடங்கின.  பேட்டிக்கு முன்பு பேட்டி காண்பவர்  அந்த எழுத்தாளரின் படைப்புகள், அவருடைய தொடக்கம், வளர்ச்சி, வாழ்க்கை வரலாறு, படைப்புகள் அனைத்தையும் நன்கு அறிந்து ஆராய்ந்து வைத்திருப்பார்.  எழுத்தாளருக்கு அந்தப் பேட்டி புத்துணர்ச்சியூட்டுவதாக அமையும்.
 பேட்டிகள் பற்றி முற்றிலும் எதிர் கோணத்தில் ஒரு கருத்து இருக்கிறது.  பேட்டியைப் படிப்பவர்கள் சாதாரணப் பத்திரிகை வாசகர்கள்.  அவர்களுக்கு எழுத்தாளர்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கப் போவதில்லை.  ஆதலால் பேட்டி காண்பவர் அந்த வாசகர்களின் பிரிதிநிதியாக இருந்து அந்த எழுத்தாளரின் பதில்களைப் பெறுவதுதான் பெரும்பான்மை வாசகர்களுக்கு நியாயம் செய்வது ஆகும்!
 ஆனால் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன.  உண்மையில் எழுத்தைப் பற்றியும் எழுத்தாளரைப் பற்றியும் ஒப்புக்குத்தான் கேள்விகள்.  பல கேள்விகள் ஜோசியர்களைக் கேட்பவையாக இருக்கும்.  இது எப்போது முடியும்?  அது எப்போது மாறும்?  இதை ஏன் நீங்கள் செய்யவில்லை?  அதை ஏன் செய்தீர்கள்?  உண்மையில் இதெல்லாம் யாருக்கும் எந்தத் தெளிவும் ஏற்படுத்தப் போவதில்லை.
 எழுத்தாளனுக்கு - புனைகதை எழுத்தாளனுக்கு - அவனுடைய புனைகதைதான் முறையான வெளிப்பாடு.  அப் புனைகதைகளுக்கு அப்பால் அவன் பேச வேண்டியிருந்தால் அவன் புனை கதைப் படைப்பை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதான் பொருள்.
 இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால் பேட்டி தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.  பல சந்தர்ப்பங்களில் பேட்டி தாட்சண்யத்துக்காக ஒப்புக் கொள்ளப் படுகிறது.  பேட்டி காண வருபவர் நிறுவனம் எதையும் சாராது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பார்.  இந்தப் பேட்டி எதாவது ஒரு பத்திரிகையில் ஒரு சிறு தொகை அவருக்குப் பெற்றுத் தரக்கூடும்.
                                                       
க்ளிக்ரவி எடுத்த இந்த அறிய புகைப்படத்தில் திலீப்குமார், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, கல்கி ஆசிரியர் ஆர்.வெங்கடேஷ் என்று முக்கிய புள்ளிகள் இடம்பெற்றுள்ளனர் 

இந்தப் பேட்டியை  எடுத்தவர்  டாக்டர்.வி. பாரதி ஹரிஷங்கர் .அவர்   .TeNet Group, IIT Madras ,Principal Project Officer

[ஆனால் திலீப் குமாரின்  இந்தப் பேட்டி  மாறுபட்டதாக உண்மையை அதன்  உள்மூலத்தில் சென்று சந்திப்பதாக அமைந்திருந்தது பேட்டிஇந்தப் பேட்டி திலீப்குமாருக்கு பாஷாபாரதி விருது கிடைத்தபோது  திலீப்குமாரைப் பாராட்டி எடுக்கப்பட்டது. இதில் திலீப்குமார்  கொண்டுள்ள  உண்மையான தமிழ் இலக்கிய ஈடுபாடு நன்கு  வெளிப்படுகிறது.]
VB: ஒரு குஜராத்தியாக தமிழ் மொழியின் பாலும்  தமிழ் இலக்கியத்தின் பாலும் உங்களுக்கு  ஆக்கப்பூர்வமான அக்கறை எப்படி ஏற்பட்டது.?
DK: எங்கள் குடும்பம் நூறு ஆண்டுகளுக்கு முன் தெற்கே இடம்பெயர்ந்து கள்ளிக்கோட்டை ,கோயம்புத்தூர்,சென்னை ஆகிய இடங்களில் குடியேறியது வெகு காலம் கழித்து ,  என் தந்தையின் மரணத்துக்குப் பின் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட,  தமிழர்களோடான என் தொடர்பு  துவங்கியது.  14ம் வயதில் ஒரு ரெடிமேட் ஆடைக்கடையில்  நான் சேல்ஸ்  பாய் ஆக வேலையில் சேர்ந்தேன். அது  தான் என்னை  தமிழ்ச்சமூகத்தின் ஏழைகளின் அரவணைப்புக்கு அழைத்துச்  சென்றது. அத்தோடு மட்டுமின்றி  எனக்குக் கல்வி மறுக்கப்பட்டதும் என் எதிர்காலத்தைக் குறித்த பெரிய கேள்விக்குரிய  என் உள்ளத்தை அரித்துக்கொண்டே இருந்தது . அத்தகைய  இருண்ட சூழ்நிலைகளில்  நான் வாசிப்புக்குத் திரும்பினேன். கைக்கு கிடைத்த எல்லாவற்றையும் வாசிக்கத்தொடங்கினேன். எனினும் அப்படி ஒன்றும் அவை அதிமாக இருந்து விடவில்லை. சமகாலத்து தமிழ் இலக்கியத்தின் நான் தாவியது மிகவும் தற்செயலான விஷயம்  தான்.  தமிழ் மொழி பால் எனக்கிருந்த இயல்பான ஈர்ப்பினால் என் ஆர்வம் நீடித்த வாசிப்புக்கு உதவியது. என் பள்ளிமேகஸினில்  தமிழ் படைப்புகள் வழங்குபவன் நான் ஒருவன் மட்டுமே. 
                                                                

                                                    டாக்டர்.வி பாரதி ஹரிஷங்கர்

வி. பா:எந்த குறிப்பிட்ட தமிழ் எழுத்தாளராவது அப்போது உங்களைப்பாதித்தது உண்டா?

தி.கு : 1960ன் பிற்பாதியில் நான் ஒரு தீவிர வாசிப்பில் இறங்கினேன்  மொழியின் மொழி மற்றும் பண்பாடு பற்றி திராவிட இயக்கித்தினர் பெருமிதமாக முழங்கி வந்த காலம் அது.அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சுக்களுக்கு தமிழ் மக்களின் அடித்தட்டு வர்க்கத்தினர் இடையே அப்போது பெருத்த வரவேற்பும் செல்வாக்கும் இருந்தது. இது இலக்கியத்தில் - அதாவது ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் லட்சியவாத எழுத்துக்கள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டது. அப்புறம் தமிழ்ப் படங்கள்.  
தமிழ் வாழ்க்கை மற்றும் சமூகம் குறித்த பல மாயைகளை தமிழ் அரசியல், இதழ்கள் மற்றும் திரைப் படங்கள் தமிழரிடையே பரப்பியது அந்தக் காலம் தான் என்று நான் சொல்லியே ஆகவேண்டும். என்னை அது பாதிக்கவே இல்லை. ஏனெனில் உண்மையான தமிழர் வாழ்வு மற்றும் உண்மையானதமிழ்ச் சமூகம் என்னவென்று நன்றாக அறிந்து வைத்திருந்தேன்.  தன் யதார்த்தவாத எழுத்துக்களால் என்னைக் கவர்ந்து என்னை  பாதித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தான். 

வி. பா: அத்தகைய தீவிரமான கருத்து பூர்வமான செல்வாக்குகளில் இருந்து பாதிக்கப் படாமல் உங்கள் எழுத்துக்களில் எந்த இசமும் தலை காட்டாமல் இருக்க  உங்களால் எப்படி முடிந்தது? நீங்கள் தெளிவாக எடுத்த முடிவா?

தி.கு இந்த கேள்விக்குப் பதில் சொல்லும் முன் என் வளர்ச்சிப் பருவத்தில் நான் கண்ட மற்றொரு தத்துவப் போக்கு ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நான் வசித்த கோயம்பத்தூர் ஒரு தொழிற்பகுதி. கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தின் கோட்டையாக அது இருந்தது .மார்க்சிஸ்ட் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. ஆனால் அந்தச் சிக்கலான கருத்துக்கள் எல்லாம் என்னால் கிரகிக்க முடியாத அளவு உயரத்தில் இருந்தன. ஒன்றை மற்றும் நான் அடையாளம் கண்டு கொண்டேன்."மனிதாபிமானக் கூறு" அது தவிர டையலெக்ட்டிக்ஸ், உபரி மதிப்பு இவை எல்லாம் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.  அப்போதும் கூட வறுமையை வெளிக்காட்டும் மத்திய தர எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கும்  வறுமையோடான கருத்துப்போக்கிற்கும் உண்மையான வறுமையின் அனுபவத்திற்கும் இடையே இருந்த இடைவெளி எனக்கு நன்கு புரிந்தது. அதுபோன்றே அறிஞர்களின் தமிழுக்கும் என்னைச் சுற்றி வாழும் எழுத்தறிவற்ற சாதாரண மனிதர் பயன்படுத்தும் தமிழுக்கும் இடையே இருந்த வேறுபாடும் எனக்கு நன்கு புலப்பட்டது

[தொடரும்]